TamilsGuide

ஒரு மனிதன் எப்படி கடவுளாகிறான்?

ஒரு மனிதன் எப்படி கடவுளாகிறான்? நாட்டுப்புறக் கதையில் வாழ்ந்த ஒரு வீரன் எப்படி மக்களின் மனதில் தெய்வமாக நிலைத்து விடுகிறான்? 
இந்தக் கேள்வியை மையத்தில் வைத்து 1956-ல் வெளிவந்த மதுரை வீரன் இன்று வரை பேசப்படும் ஒரு திரைப்படமாக இருப்பதன் காரணம் என்ன?
இயக்குநர் டி. யோகானந்த் (டி இந்தப் படத்தை வெறும் வரலாற்றுக் கதையாக அணுகவில்லை. நாட்டுப்புற தெய்வமாக வணங்கப்படும் மதுரை வீரன் கதையை அவர் ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் சொல்ல முயன்றிருக்கிறார்.
 திரைக்கதையை எழுதிய கவிஞர் கண்ணதாசன்  வசனங்களில் கவித்துவத்தையும், அதே நேரத்தில் பாமர மக்களுக்கும் புரியும் நேரடித் தன்மையையும் கொண்டு வந்திருக்கிறார். 
இது ஐம்பதுகளில் தமிழ் சினிமாவில் பெருகியிருந்த ஆடை அலங்காரப் படங்களின் வரிசையில் வந்தாலும், அதிலிருந்து தனித்து நிற்கும் ஒரு பார்வையைக் கொண்டிருக்கிறது.
நடிப்பில் இந்தப் படம் இரண்டு முக்கிய நட்சத்திரங்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. வீரன் பாத்திரத்தில் எம். ஜி. ஆர் தோன்றுகிறார். 
முதலில் புராணக் குறிப்புகள் இருப்பதால் நடிக்க மறுத்தவர், பின்னர் ஒப்புக்கொண்டு இந்தக் கதாபாத்திரத்தில் தனது முழு உடல்மொழியையும் மாற்றிக் காட்டியிருக்கிறார். 
அவரது வீரத்தை விட அவரது மனிதநேயத்தை முன்னிறுத்தும் விதத்தில் அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. 
அவருக்கு இணையான இரண்டு முக்கிய பெண் பாத்திரங்களில் பொம்மியாக பி. பானுமதி மற்றும் வெள்ளையம்மாவாக பத்மினி நடித்திருக்கிறார்கள்.
 பானுமதி  கட்டுக்காவல் கொண்டு பாதுகாக்கப்பட்ட இளவரசி என்ற வழக்கமான வரையறைக்குள் அடங்காமல், தைரியமும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட பெண்ணாக வருகிறார். 
பத்மினிக்கு இது எம். ஜி.ஆருடன் நடித்த முதல் படம். அதுவரை நாட்டுப்புறக் கதையில் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை என்று கருதப்பட்ட வெள்ளையம்மா பாத்திரத்தை, இயக்குநரிடம் கேட்டு அவர் மாற்றி எழுதச் செய்துள்ளனர். 
அதனால் அந்தப் பாத்திரத்தில் ஒரு கலைஞருக்குரிய கண்ணியமும் திறமையும் தெரிகிறது. 
துணைப் பாத்திரங்களில் நரசப்பனாக டி. எஸ். பாலையா (டி. எஸ். பாலையா) வில்லத்தனத்தில் ஒரு புதிய பரிமாணத்தையே காட்டுகிறார், அவரது சூழ்ச்சி வெறும் கோபத்தால் வருவதல்ல, பயத்தாலும் பேராசையாலும் வருவது. 
நகைச்சுவைக்காக வரும் என். எஸ். கிருஷ்ணன் (என். எஸ். கிருஷ்ணன்) மற்றும் டி. ஏ. மதுரம் (டி. ஏ. மதுரம்) இணை கதையின் கனத்தைக் குறைக்காமல் இயல்பான சிரிப்பைக் கொடுக்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாக, எம். ஏ. ரஹ்மானின் அபாரமான கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு காட்டுப் பகுதிகளையும், அரண்மனை உட்புறங்களையும், அழகர் மலை போன்ற வெளிப்புறங்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
 கங்காவின் கலை இயக்கம் பிரமாண்ட அரண்மனைக்குள் கூட ஒரு நாட்டுப்புறத் தன்மையைத் தக்க வைக்கிறது.
 ஆடை வடிவமைப்பு காலத்தை நினைவூட்டும் அதே நேரத்தில் பாத்திரங்களின் சமூக நிலையைத் தெளிவாக உணர்த்துகிறது.
 வி. பி. நடராஜனின் படத்தொகுப்பு 165 நிமிடங்கள் ஓடும் படத்தை எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுவென நகர்த்துகிறது.
இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் அவர்கள் இந்தப் படத்தில் நாட்டுப்புற இசையையும் கர்நாடக ராகங்களையும் கலந்து ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார். 
ஆடல் காணீரோ  பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்து இன்று வரை நினைவில் நிற்கிறது. சும்மா கிடந்த சோத்துக்கு போன்ற பாடல்கள் நாட்டுப்புற மெட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த இசை வெறும் பின்னணியாக இல்லாமல், கதையின் உணர்ச்சிகளைத் தாங்கிப் பிடிக்கிறது.
இந்தப் படத்தின் மிக முக்கியமான தனித்துவம் அதன் மனிதநேயப் பார்வை. 
இது ராபின் ஹூட் பாணியிலான கதை என்று  திரைப்படக் கலைக்களஞ்சியங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது அதிகாரத்தின் பக்கம் நிற்காமல், மக்களின் பக்கம் நிற்கும் வீரன்.
 ஆனால் இயக்குநர் இதை வெறும் சண்டைப் படமாகச் சுருக்கவில்லை. பிறப்பால் ஒருவரின் மதிப்பைத் தீர்மானிக்கக் கூடாது என்ற கருத்தை, சொற்பொழிவு இல்லாமல் பாத்திரங்களின் வாழ்க்கை மூலம் சமூக நீதி கருத்தாக சொல்கிறார்.
 அருந்ததியர் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் கூட இந்தப் படத்திற்குப் பிறகு எம். ஜி. ராமச்சந்திரனுக்கு தலித் மக்களிடையே ஆதரவு பெருகியதாகக் குறிப்பிடுகிறார்கள். இது படத்தின் சமூகத் தாக்கத்தைக் காட்டுகிறது.
வெளியான காலத்தில் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 
1956 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி, திரையிடப்பட்ட 36 திரையரங்குகளிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் மட்டும் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. 
அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சுதேசமித்ரன், கல்கி போன்ற பத்திரிகைகள் இதைத் தவறவிடக் கூடாத படம் என்று பாராட்டின. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து அந்தக் காலத்தில் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.
இந்தப் படத்தை ஏன் இப்போது பார்க்க வேண்டும்? இது வெறும் பழைய வரலாற்றுப் படம் அல்ல. ஒரு மனிதன் தனது பிறப்பைத் தாண்டி, தனது செயல்களால் எப்படி உயர்கிறான், காதல் எப்படி சாதியையும் அதிகாரத்தையும் எதிர்க்கிறது, கலை எப்படி அதிகாரத்தின் முன் தலை வணங்க மறுக்கிறது என்பதைப் பற்றிய ஒரு நாட்டார் கதை. 

இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனது சொந்த நியாயத்துடன் இயங்குகிறது.
 இயக்குநரின் அணுகுமுறை பார்வையாளரை ஒரு நீதிபதியாக அல்லாமல், ஒரு சாட்சியாக உட்கார வைக்கிறது. படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கும் கேள்வி, வீரம் என்பது வாள் வீசுவதா, இல்லை அநீதியை எதிர்த்து நிற்பதா என்பதுதான். 
அந்தக் கேள்விக்கான பதிலைத் திரையில் தேடுவதற்காகவே இந்தப் படம் இன்றும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
1956-ல் வெளிவந்த மதுரை வீரன் படத்தின் இசை என்பது வெறும் பாடல்களின் தொகுப்பு அல்ல, அது ஒரு காலத்தின் குரல்.
 இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்  அவர்களின் இசை மேதைமை இந்தப் படத்தில் முழுமையாக மிளிர்கிறது.
 கர்நாடக செம்மையும், நாட்டுப்புற மண்ணின் மணமும், மேடை நாடகத்தின் உணர்ச்சியும் என மூன்றையும் ஒரே இழையில் கோர்த்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.
1. செந்தமிழா
இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் , பாடியவர் எம். எல். வசந்தகுமாரி . தமிழைத் தாயாகப் போற்றும் தொடக்கப் பாடல். வசந்தகுமாரியின் குரலில் தமிழின் இனிமை கொஞ்சுகிறது.
2. நாடகமெல்லாம்
இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன், பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன்  மற்றும் ஜிக்கி . வாழ்க்கையே ஒரு நாடகம் என்ற தத்துவத்தை இரு குரல்கள் மாறி மாறிப் பாடும் அற்புதம்.
3. அவர்க்கும் எனக்கும்
இயற்றியவர் கண்ணதாசன், பாடியவர் பி. பானுமதி அவர்களே. காதலின் ஏக்கத்தைத் தனது சொந்தக் குரலில் பானுமதி பாடும்போது, அது நடிப்பல்ல, உணர்வின் நேரடி வடிவம்.
4. கடமையிலே
இயற்றியவர் கண்ணதாசன், பாடியவர் டி. எம். சௌந்தரராஜன். வீரனின் கடமை உணர்வை உரக்கச் சொல்லும் ஆண்மைக் குரல் பாடல்.
5. ஆடல் காணீரோ
இதுதான் இந்தப் படத்தின் ஆன்மா. இயற்றியவர் உடுமலை நாராயண கவி , பாடியவர் எம். எல். வசந்தகுமாரி. ராகம் சாருகேசி. சாருகேசி என்றாலே சோகமும் பக்தியும் கலந்த ஒரு ஆழமான உணர்வு. அந்த ராகத்தில் வசந்தகுமாரியின் குரல் வெள்ளையம்மாவின் நாட்டியத்திற்கு உயிர் கொடுக்கிறது. இன்று வரை மேடைகளில் பாடப்படும், கேட்டவரை மயக்கும் பாடல் இது.
6. சும்மா கிடந்த சோத்துக்கு கஷ்டம்
இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , பாடியவர்கள் பி. லீலா மற்றும் ஜிக்கி. 
இது நாட்டுப்புற மெட்டை அடிப்படையாகக் கொண்ட பாடல். தெலுங்குப் படமான ரோஜுலு மாராயி படத்தின் ஏருவாக சாகாரோ என்ற நாட்டுப்புற பாடலின் மெட்டைத் தழுவியது. இதற்காக வழக்கு கூட வந்து, நாட்டுப்புற மெட்டுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்த வரலாறும் உண்டு. உழைக்காமல் உண்பவர்களைச் சாடும் நகைச்சுவைப் பாடல்.
7. குன்றத்தூர் அடி வரும்
இயற்றியவர் உடுமலை நாராயண கவி, பாடியவர் பி. லீலா. மென்மையான பக்திப் பாடல்.
8 & 9. வாங்க மச்சான் வாங்க
இயற்றியவர் தஞ்சை என். ராமையா தாஸ் . இதில் இரண்டு வடிவங்கள். டூயட்டாக டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா பாடியிருக்கிறார்கள், தனிப் பாடலாக பி. லீலா மட்டும் பாடியிருக்கிறார். 
கிராமத்து காதலின் குறும்பும் குதூகலமும் கொண்ட பாடல். 
10. ஏச்சு பிழைக்கும்
இயற்றியவர் தஞ்சை என். ராமையா தாஸ், பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜிக்கி.
இந்தப் பத்து பாடல்களையும் சேர்ந்து மொத்தம் 38 நிமிடம் 51 வினாடிகள் இசை விருந்து. இதில் கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை ராமையா தாஸ் என நான்கு மாபெரும் கவிஞர்களின் வரிகள். டி. எம். சௌந்தரராஜன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி, பானுமதி என ஐந்து தேன்குரல்கள்.
ஜி. ராமநாதனின் இசையில் ஒரு அதிசயம் இருக்கிறது. அரண்மனைப் பாடலுக்கு கர்நாடக ராகத்தின் கம்பீரம், காட்டுப் பாடலுக்கு நாட்டுப்புறத்தின் துள்ளல், காதல் பாடலுக்கு மெல்லிசையின் மென்மை என ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற இசையை அவர் தந்திருக்கிறார். அதனால்தான் எழுபது ஆண்டுகள் கடந்தும் இந்தப் பாடல்கள் இன்னும் காற்றில் வாழ்கின்றன.
இப்படத்தின் நடனம்  வெறும் பொழுதுபோக்கு அம்சம் அல்ல. அது கதையின் கலாச்சாரத்தையும், பாத்திரங்களின் தகுதியையும் நிரூபிக்கும் ஒரு மொழி. இதில் ஐந்து பேரின் நடனத்திறனும் ஐந்து விதமான பரிமாணங்களைக் காட்டுகிறது.
வீரன் பாத்திரத்தில் வரும் எம். ஜி. ஆர்  பரதநாட்டியக் கலைஞர் அல்ல, ஆனால் அவரது நடனம் உடல் மொழியின் நடனம். அவர் ஆடும்போது அடவுகளை விட அதிர்வுகள் தான் முக்கியம். அவரது சண்டைக் காட்சிகளில் கூட ஒரு நடன ஒழுங்கு இருக்கும். 
வெள்ளையம்மாவுடன் இணைந்து மாறுவேடத்தில் ஆடும் காட்சிகளில் அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், பத்மினியின் நடனத்திற்கு இடம் கொடுத்து, அவரது அசைவுகளுக்கு ஏற்ப உடலை வளைப்பது தெரியும்.
 இது அவரது நடன அறிவு. தான் பெரிய நடனக் கலைஞன் இல்லை என்பதை உணர்ந்து, கூட்டு நடனத்தில் தாளம் தவறாமல் இருப்பதும், பார்வையாளரின் கவனத்தை கதாநாயகியின் கலையின் பக்கம் திருப்புவதும் ஒரு திறமை.
இந்தப் படத்தின் நடனத்தின் மையமே வெள்ளையம்மாவாக வரும் பத்மினி  தான். இவரை நாட்டியப் பேரொளி என்றே அழைப்பார்கள். 
இவரது நடனம் சதிர் மரபில் இருந்து வந்த பரதநாட்டியத்தின் சுத்தமான வடிவம். ஆடல் காணீரோ பாடலில் சாருகேசி ராகத்தில் இவர் ஆடும் போது, கண், கை, கால் மூன்றும் ஒரே தாளத்தில் பேசும். 
இவரது கால் அசைவில் மண்ணின் அழுத்தம் இருக்கும், கை அசைவில் காற்றின் மென்மை இருக்கும். 
திருமலை நாயக்கரின் சபையில் ஒரு தேவதாசியாக இவர் ஆட வேண்டிய கட்டாயத்தையும், அதே நடனத்தில் தனது காதலையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் இரட்டைத் தன்மையை இவரது முக பாவனைகள் காட்டுகின்றன.
 இவருக்கு இது எம். ஜி. ஆருடனான முதல் படம் என்பதால், நடனத்தின் மூலமே தனது பாத்திரத்தின் கண்ணியத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இருந்தது. அதை இவர் மிக அழகாகச் செய்திருக்கிறார்.
கிள்ளி பாத்திரத்தில் வரும் ஈ. வி. சரோஜாவின் நடனம் வேறு வகை. இவர் நாட்டுப்புறத்திற்கும் சினிமா நடனத்திற்கும் இடையே பாலமாக இருந்தவர். 
இவரது ஆட்டத்தில் பரதநாட்டியத்தின் கட்டுக்கோப்பை விட, நாட்டுப்புறத்தின் துள்ளல் அதிகம் இருக்கும். 
இடுப்பின் வேகமான அசைவுகளும், கண்களின் குறும்பும் இவரது அடையாளம். மதுரை வீரன் போன்ற வரலாற்றுப் படத்தில் அரண்மனை நடனத்திற்கு நடுவே, மக்கள் மத்தியில் ஆடும் நடனத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ராகினி  அவர்களின் நடனம் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று புகழ்பெற்ற லலிதா, பத்மினி, ராகினி மூவரில் ஒருவராக, ஒரு தனித்த பள்ளியைச் சேர்ந்தது. லலிதா, பத்மினி, ராகினி மூவரும் சேர்ந்து ஆடும்போது ஒரே உடலின் மூன்று பிரதிபலிப்புகள் போல் இருக்கும். 
ராகினியின் நடனத்தில் கதக் மற்றும் கேரள நடன மரபுகளின் சாயல் இருக்கும். கைகளை வளைக்கும் விதத்திலும், கழுத்தைத் திருப்பும் நளினத்திலும் அது தெரியும்.
 குழு நடனக் காட்சிகளில் இவர் மையத்தில் இல்லாவிட்டாலும், ஓரத்தில் இருந்து கூட தாளத்தைத் தக்க வைக்கும் துல்லியம் இவரிடம் உண்டு.
குசலகுமாரி அவர்களின் நடனம் இன்னும் வித்தியாசமானது. இவர் பரதநாட்டியத்தை விட, சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட கவர்ச்சி நடனத்தில் பெயர் பெற்றவர். 
இவரது ஆட்டத்தில் அடவுகளை விட பாவனைகள் முக்கியம். உடலை வளைத்து, பார்வையாளரை நேராகப் பார்த்து ஆடும் முறை இவருடையது. 
மதுரை வீரன் படத்தில் அரண்மனைக் கூட்ட நடனங்களில் இவரது இருப்பு, பத்மினியின் பாரம்பரிய நடனத்திற்கு எதிராக ஒரு நவீன, மக்களைக் கவரும் நடனத்தைக் காட்டுகிறது. 
இதனால் ஒரே சபையில் இரண்டு விதமான கலை ரசனைகள் மோதுவது போன்ற காட்சி அமைப்பு உருவாகிறது.
 எம். ஜி. ராமச்சந்திரனின் கட்டுப்பாடான ஆண்மை நடனம், பத்மினியின் செவ்வியல் தூய்மை, ஈ. வி. சரோஜாவின் நாட்டுப்புறத் துள்ளல், ராகினியின் சகோதரி பள்ளியின் ஒத்திசைவு, குசலாகுமாரியின் சினிமா கவர்ச்சி என ஐந்து திசைகளில் இருந்து வரும் நடனங்கள் இந்தப் படத்தை ஒரு முழுமையான நடனக் கலைக்களஞ்சியமாகவே மாற்றுகின்றன.
===============================
படத்தின் கதை:-
வாரணவாசி என்ற நாட்டின் தலைவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறக்கும்போதே கொடி சுற்றிப்பிறக்கிறது, அதன் உடலில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் ஒரு மச்சம் இருப்பதாக சோதிடர்கள் ஆரூடம் கூறுகிறார்கள். 
அந்தக் குழந்தையால் நாட்டுக்கே கேடு வரும் என்று சோதிடரின் வாக்கை ஏற்று, தலைவன் தன் சொந்தக் குழந்தையையே மனைவியின் கதறலை பொருட்படுத்தாமல் காட்டில் கொண்டு போய் விட்டுவிடச் சொல்கிறான். அதன்படி குழந்தை காட்டில் கைவிடப்படுகிறது.
அந்த நேரத்தில் காட்டு வழியாக வந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையைக் கண்டெடுக்கிறார்கள். 
செருப்பு தைப்பவர் (என். எஸ். கிருஷ்ணன்) மற்றும் அவரது மனைவி (டி. ஏ. மதுரம்) இருவரும் அந்தக் குழந்தையை தங்கள் சொந்த மகனாகவே வளர்க்க முடிவு செய்கிறார்கள். 
காட்டு மிருகங்கள் சூழ்ந்திருந்தும் அந்தக் குழந்தை அழாமல் தைரியமாக இருந்ததால், அவனுக்கு வீரன் (எம். ஜி. ஆர்) என்று பெயர் வைக்கிறார்கள். போர்க்கள வீரன் என்று பொருள்படும் அந்தப் பெயருக்கேற்ப அவன் வளர்கிறான்.
வீரன் வளர்ந்து துணிச்சலும் நல்ல குணமும் கொண்ட வாலிபனாகிறான். ஒரு நாள் தொட்டியம் இளவரசி பொம்மி (பி. பானுமதி) காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, எதேச்சையாக அங்கு வரும் வீரன் அவளை சமூக விலக்கு தீட்டு மறந்து தொட்டு தூக்கி காப்பாற்றுகிறான். 
தன்னைக் காப்பாற்றிய வீரனின் வீரத்தையும் நல்ல மனதையும் கண்டு பொம்மி அவன் மீது காதல் கொள்கிறாள். 
ஆனால் தொடக்கத்தில் வீரன் அந்தக் காதலை சமூக ஏற்றத்தாழ்வால் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அதன் பிறகு ஒரு சம்பவம் நடக்கிறது. வீரன் யானையால் மிதிபட்டு இறக்கும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறான். அப்போது பொம்மி ஆண் வேடம் அணிந்து கொண்டு யானை மீது ஏறி வந்து வீரனைக் காப்பாற்றுகிறாள்.
 இந்தச் செயல் மூலம் பொம்மியின் காதல் எவ்வளவு ஆழமானது என்பதை வீரன் படிப்படியாக உணர்ந்து கொள்கிறான், அதன் பின் அவளது காதலை அவனும் ஏற்றுக்கொள்கிறான்.
பொம்மியின் மாமனான நரசப்பன் (டி. எஸ். பாலையா) கோழையானவன், அவன் பொம்மியை தானே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். 
வீரன் வந்ததால் அவனது திட்டம் கலைந்து போவதைக் கண்டு அவன் சதி செய்யத் தொடங்குகிறான். 
வீரன் செருப்பு தைப்பவரின் வளர்ப்பு மகன் என்பதால் குலம் தாழ்ந்தவன் என்று காரணம் காட்டி, அவனுக்கும் பொம்மிக்கும் இடையே பல இன்னல்களை உண்டாக்குகிறான். 
பொம்மியின் தந்தையான தொட்டியம் மன்னனும் இந்தக் காதலை எதிர்க்கிறான். 
இந்த எதிர்ப்புகளால் பொம்மியை பிரிந்து வாட முடியாத வீரன், நேராக அரண்மனைக்கு வந்து பொம்மியை தூக்கிக் கொண்டு சென்றுவிடுகிறான்.
இதனால் கோபமடைந்த நரசப்பன் திருச்சி மன்னனிடம் உதவி கேட்டுப் போகிறான்.
 திருச்சி மன்னன் இருவரையும் பிடித்து வரச் செய்து விசாரிக்கிறான். 
விசாரணையில் வீரனும் பொம்மியும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை உணர்ந்து கொள்கிறான்.
 அவர்களது உண்மையான காதலை ஏற்று அவர்களது திருமணத்தை அவனே முறைப்படி நடத்தி வைக்கிறான்.
 மேலும் வீரனின் வீரத்தைக் கண்டு வியந்து அவனை தனது படைத்தளபதியாகவே நியமிக்கிறான்.
அந்த சமயத்தில் மதுரையை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் (ஓ. ஏ. கே. தேவர்) திருச்சி மன்னனிடம் உதவி கேட்கிறார். 
மதுரை மக்களை அச்சுறுத்தி வந்த ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தொல்லையை அடக்க வேண்டும் என்பதே அந்த உதவி. இதற்காக திருச்சி மன்னன் வீரனை மதுரைக்கு அனுப்புகிறான். 
மதுரை வந்த வீரனை திருமலை நாயக்கர் தனது படைத்தளபதியாக நியமிக்கிறார். 
மதுரையில் இருக்கும்போது வீரன் அரண்மனை நாட்டியக்காரியான வெள்ளையம்மா (பத்மினி) வைப் பார்க்கிறான். 
அவளது அழகை மட்டுமல்ல, அவளது நல்லொழுக்கத்தையும் கலைத்திறமையையும் கண்டு அவள் மீது மதிப்பும் அன்பும் கொள்கிறான்.
மதுரையை அச்சுறுத்திய கொள்ளையர்கள் அழகர் மலையில் பதுங்கியிருப்பதை வீரன் அறிகிறான். 
அவர்களைப் பிடிக்க வீரன் ஒரு திட்டம் தீட்டுகிறான். வீரனும் வெள்ளையம்மாவும் மாறுவேடம் அணிந்து கொண்டு கொள்ளையர்களின் கூட்டத்திற்குள் நுழைகிறார்கள்.
 அவர்கள் உள்ளே சென்று கொள்ளையர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போதே, மறைந்திருந்த படைவீரர்கள் உள்ளே புகுந்து கொள்ளையர்களில் பெரும்பாலானோரைப் பிடித்துவிடுகிறார்கள்.
 கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீட்டு மக்களிடம் சேர்க்கிறார்கள்.
ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு பெரிய சிக்கல் உருவாகிறது. 
திருமலை நாயக்கர் வெள்ளையம்மாவை தனது ஆசைநாயகியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். 
வெள்ளையம்மா வீரனைக் காதலிக்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர் கடும் கோபம் அடைகிறார். 
அந்த நேரத்தில் தீய எண்ணம் கொண்ட நரசப்பனும், நாயக்கரின் முன்னாள் படைத்தளபதியான குடிலனும் சேர்ந்து மன்னனின் மனதைக் கலைக்கிறார்கள். 
வீரன் துரோகம் செய்துவிட்டான் என்று மன்னனிடம் பொய்யைப் பரப்புகிறார்கள். 
இதை நம்பிய திருமலை நாயக்கர் வீரனை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி, அவனது ஒரு கையையும் ஒரு காலையும் வெட்டி எறியும்படி உத்தரவிடுகிறார்.
தண்டனையை நிறைவேற்றுவதற்காக வீரன் சபைக்கு கொண்டு வரப்படுகிறான்.
 தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவனை வீரன் அடையாளம் கண்டு கொள்கிறான்.
 அவன்தான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனான சங்கிலிக்கருப்பன். இதுவரை தப்பித்திருந்த அந்தத் தலைவனைக் கண்டதும் வீரன் வேகமாகப் பாய்ந்து சென்று அவனுடன் சண்டையிட்டு அவனை அங்கேயே கொன்று விடுகிறான். 
தனது கடமையான கொள்ளையர்களை ஒழிக்கும் பணி இப்போது முழுமையாக முடிந்துவிட்டது என்ற திருப்தி வீரனுக்கு ஏற்படுகிறது. 
அதன் பிறகு தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அவனே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான். 
அவனது கையும் காலும் வெட்டப்படுகிறது. சிறிது நேரத்தில் அவனது உயிர் உடலை விட்டுப் பிரிகிறது. 
வீரன் இறந்ததைக் கண்டு தாங்க முடியாத பொம்மியும் வெள்ளையம்மாவும் அவனுடனேயே உயிரை விடுகிறார்கள். மூவரும் வானுலகில் ஒன்று சேரும் சமயத்தில் படம் நிறைவடைகிறது. 

 

Geethappriyan Karthikeyan
 

Leave a comment

Comment