பள்ளிப் பருவத்தில் திராவிடப் பாரம்பரியத்தைப் பற்றியும், பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் வீட்டிலே பேசுவதைக் கேட்டிருந்தாலும், அண்ணாவின் வரலாற்றையும், அவருடைய சிந்தனையின் ஆழத்தையும் முழுமையாக உணரும் வாய்ப்பு அப்போது எனக்குக் கிடைக்கவில்லை.
ஆனால், முதன்முதலாக எனது தமிழ் துணைப்பாடத்தில் பேரறிஞர் அண்ணா எழுதிய ‘செவ்வாழை’ என்ற அற்புதச் சிறுகதையைப் படித்தேன்.
அந்த எழுத்து நடை... அந்தக் கதையின் உணர்வு... அது என் மனதை உலுக்கிய விதம்...
அண்ணாவின் மீது எனக்கே தெரியாமல் ஒரு பேரீர்ப்பை உருவாக்கியது.
வீட்டில் அந்த ‘செவ்வாழை’ கதையைப் பற்றி நான் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, என் தந்தை மெய்சிலிர்த்து என்னை உச்சி முகர்ந்தார்.
பிறகு, என் வாசிப்பிற்குத் தீனி போட வேண்டும் என்பதற்காக, அண்ணாவின் ‘ஆரிய மாயை’, ‘ரோமாபுரி ராணிகள்’, ‘தம்பிக்கு’, ‘நீதிதேவன் மயக்கம்’, ‘ஓர் இரவு’ போன்ற படைப்புகளை எனக்கு வாசிக்கக் கொடுத்தார்.
அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, அண்ணாவின் மீது தீராத காதலும் பேரன்பும் ஏற்பட்டது.
எனது பதின்மங்கள் முழுவதும் அண்ணாவுடனேயே விளையாடி, அண்ணாவுடனேயே உறவாடி, அண்ணாவையே தலைமேல் வைத்துத் தூங்கிக் கழிந்தன.
அண்ணாவின் எழுத்துகள் எனக்குத் திராவிடப் பாரம்பரியத்தின் ஆழத்தையும், சமூகச் சிந்தனையின் அழகையும் கற்றுக்கொடுத்தன.
அண்ணாவைப் பற்றி நான் வியந்து நிற்கும் பல விஷயங்களில், அவருக்கும் நமது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த அந்த உன்னதமான அண்ணன்–தம்பி பாசம் என்னை மிகவும் சிலிர்க்க வைத்த ஒன்று.
1967 ஜனவரி 12...
எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இக்கட்டான நேரம்.
தமிழகம் பதற்றத்தில் இருந்த அந்த வேளையில், மக்கள் முன் தோன்றிய பேரறிஞர் அண்ணா உருக்கமாகப் பேசிய அந்த வார்த்தைகளைப் படித்தது இன்றளவும் என் இதயத்தில் எதிரொலிக்கிறது.
“காந்தி சுடப்பட்டார்... இறந்து போனார்! ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்... இறந்து போனார்! ஜான் எஃப். கென்னடி சுடப்பட்டார்... இறந்து போனார்! என் தம்பி எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்... நல்லவேளை யார் செய்த நற்பயனோ அவர் பிழைத்துக்கொண்டார்!”
என்று தனது தம்பியின் உயிரைப் பற்றிய அக்கறையோடு அண்ணா பேசிய அந்த வார்த்தைகள், அப்போது மருத்துவமனைக்கு வெளியே தவித்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியதாக என் தாத்தா சொல்வார்.
“புரட்சித்தலைவர் பிழைத்துக்கொள்வார்...”
என்ற நம்பிக்கையோடு ராயப்பேட்டை மருத்துவமனையை விட்டு ரசிகர்கள் வெளியேறிய அந்தத் தருணத்தை கற்பனை செய்து பார்க்கும்போதெல்லாம், அண்ணன்–தம்பி பாசத்தின் ஆழம் அளவிட முடியாதெனப் புரிகிறது.
அதுபோலவே, புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும்...
“மக்களிடம் செல்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுடன் வாழ்...”
என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் செயலால் நிரூபித்த வரலாற்றின் அழியாத அத்தியாயங்கள்!
அண்ணாவின் பெயரையும், எம்.ஜி.ஆரின் பெயரையும் உச்சரிக்காமல், இந்த மண்ணின் அரசியல் அரியணையில் எவருமே ஏற முடியாது என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டுச் சென்ற, ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மண்ணில் மலரும் இந்த அபூர்வத் திராவிடப் பூக்கள்...
மீண்டும் இந்த மண்ணில் மலராதோ என்ற ஏக்கத்தோடு,
தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலெங்கும் இரட்டை இலைக் கோலமிட்டு.....
காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுவோம்


