நம் நாட்டில் உள்ள கோவா, டையு, டாமன் போன்ற பகுதிகள் போர்த்துக்கீசியரால் வளைக்கப்பட்டு, அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் போர்ச்சுக்கல் நாட்டினை உள்ளடக்கி இருந்தபோது, பிரெஞ்சு இந்தியாவில் விடுதலை - மற்றும் இணைப்புப் போன்ற போராட்டங்கள் நடைபெறுவதுபோல, கோவா பகுதியிலும் நடந்தது. பிறகு இணைந்தன அப்பகுதிகள்.
அந்தப் போராட்ட காலத்தில் கொலைக் குற்றத்திற்கு ஆளாகி, போர்ச்சுக்கல் நாட்டுச் சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாளை எதிர்பார்த்து துன்பக் கடலில் வீழ்ந்து துடித்துக் கொண்டிருந்தார் ஒரு கோவா இளைஞர்! 1967 இல் ஆட்சிக்கு வந்த அண்ணா அமெரிக்கா, அய்ரோப்பா போன்ற பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது, வாட்டிகன் நகருக்கு ரோமன் கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப்படும் போப் அவர்களைச் சந்திக்க விரும்பிச் சென்றார்.
பலருக்கும் வியப்பு! என்ன கடவுள், மதம், இவற்றுக்கு எதிரான இவர் போப்பிடம் ஆசி வாங்கச் சென்றுள்ளாரே என்ற பேச்சு. எங்கெங்கும் சில அரை வேக்காடுகளின் அவசரகோல விமர்சனங்களும் வீசப்பட்டன! அண்ணா, போப் அவர்களைச் சந்தித்தபோது, இந்தியாவில் போர்த்துகீசிய போராட்டம் நடந்தபோது, வாலிபன் ஒருவன் தூக்குத் தண்டனைஅளிக்கப்பட்டு சிறையில் போர்ச்சுகல்லில் அவதியுறுவதை விளக்கி, போப் கருணை காட்டி விடுதலை செய்யச் சொன்னால், போப் ஆண்டவரின் மதக் கொள்கையை ஏற்று நடக்கும் அந்த போர்த்துக்கீசிய அரசு அதனை அலட்சியம் செய்யாது, அந்த இளைஞனை விடுதலை செய்து, அவனை வாழ வைக்கும் என்று மனித நேயம் பொங்க ஒரு வேண்டுகோளை மிகுந்த அன்புடனும், அடக்கத்துடனும் போப் உள்ளத்தைக் உருக்கும் வண்ணம் கூறினார்.
போப் அதனை ஏற்று, பரிந்துரை செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, அந்த வீரன் விடுதலை ஆனான். சென்னையை நோக்கிப் பயணம் செய்தான். தன்னை யார் என்றே தெரியாத ஒரு மாமனிதர் தனக்கென இவ்வளவு பெரிய சர்வதேசத் தொண்டறத்தைச் செய்துள்ளாரே என்று நன்றி பொங்க ஓடோடி வந்தார்.
ஆனால் அண்ணாவோ, உயிருடன் இல்லை - அவர் நன்றி சொல்ல வந்தபோது!
அண்ணாவின் நினைவிடம் அமைந்த கடற்கரையில் சென்று தனது கண்ணீரை அவர் நினைவிடத்தில் காணிக்கையாக்கி, அந்தோ வங்கக் கடலோரத்தைக் கடந்து துயரக் கடலில் துடித்த வண்ணமே சென்றார் அந்த விடுதலை பெற்ற வீரர்!
- விடுதலை


