AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளில் AI மனித குலத்தையே அழிக்கும் சாத்தியமுள்ளதாக முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர், ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, "ஏஐ விரைவில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும்.
AI-யை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். அவர்கள் ஊடகங்களின் முன்பு அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசிவிட்டு AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.
அவரின் கருத்தை தொடர்ந்து விவாதம் எழுந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என இந்த முடிவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், AI மனிதர்களை அழித்து விடும் என்ற எச்சரிக்கையுடன் கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "நான் சமீபத்தில் கூகிள் டீப்மைண்ட் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தேன். அங்கு நான் ஏஜிஐ பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சியில் பணியாற்றி வந்தேன்.
கூகிளில், நான் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை நேரடியாகக் கண்டேன். இந்தத் தொழில்நுட்பத்தின் இயல்பான போக்கைக் கண்டு நானும் மிகவும் கவலைப்படுகிறேன். செயற்கை நுண்ணறிவு நம்மைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்ற வேகம் திகைக்க வைப்பதாக உள்ளது.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அவை ஓப்பன்ஏஐ-யின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, யாருடைய விருப்பத்திற்கும் எதிராக, ஹக்கிங்ஃபேஸ் என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தை தன்னிச்சையாக ஹேக் செய்கின்றன.
ஹக்கிங்ஃபேஸ் சம்பவத்தில் ஈடுபட்ட கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் போலவே, தவறாக ஒருங்கிணைக்கப்பட்ட மீயறிவுகள் நமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, மனிதகுலத்தின் நிரந்தர அதிகார இழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் அபாயகரமான செயல்களைச் செய்யக்கூடும்.
என் பார்வையில், இந்த நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை இதுதான்" என தெரிவித்துள்ளார்.
கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸ், "நான் 3 வாரங்களுக்கு முன்பு கூகிள் டீப் மைண்டின் ஏஜிஐ பாதுகாப்புக் குழுவிலிருந்து விலகி இதில் சேரவிருக்கிறேன்.
கடந்த சில வாரங்களில், செயற்கை மாதிரிகள் ஒன்றுடன் ஒன்று கூட்டுச் சதி செய்வது, நிறுவனங்களை ஹேக் செய்வது, தங்கள் தடயங்களை மறைப்பது, மற்றும் மனிதர்களைச் சமூகப் பொறியியல் மூலம் கட்டுப்படுத்துவது பற்றி நாம் அறிந்து கொண்டோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான வாய்ப்பு இருப்பதாக நான் இப்போது நினைக்கிறேன்.
அதன் சரியான நிகழ்தகவு எனக்குத் தெரியாது, ஆனால் இது உலகின் மிக முக்கியமான பிரச்சனையாக மாறும் அளவுக்கு அது அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


