TamilsGuide

யேர்மனியில் வலதுசாரிகளின் எழுச்சி

கிழக்கு யேர்மனியின் சக்ஸோனி-அன்ஹால்ற் மாநிலத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘யேர்மனிக்கான மாற்று’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 43.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற இந்தக் கட்சி மாநில அவையில் 39 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. 83 ஆசனங்களைக் கொண்ட மாநில அவையில் தனித்து ஆட்சியமைப்பதற்கான போதிய ஆசனங்களைக் கொண்டிராத போதிலும் புதிதாக மாநிலங்கள் அவைக்குள் பிரவேசம் செய்துள்ள ‘சஹ்ரா வாகன்நெக்ற் கூட்டமைப்பு’ கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு முயலக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 5.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள இந்தக் கட்சி 5 ஆசனங்களை வென்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு 42 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில் இரண்டு கட்சிகளிடமும் 44 ஆசனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் யாவும் ‘யேர்மனிக்கான மாற்றுக் கட்சி’ பெரு வெற்றி பெறும் எனவே கணித்திருந்தன. எனினும், அத்தகைய ஒரு பெரு வெற்றியை அந்தக் கட்சி பெறுவதைத் தடுத்துவிடும் நோக்குடன் ‘பசுமைக் கட்சி’ மற்றும் ‘சோசலிச ஜனநாயகக் கட்சி’ ஆகியவை வீடு வீடாகச் சென்று பிரசாரங்களை மேற்கொண்டன. மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் யாவும் யேர்மனிக்கான மாற்றுக் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் அந்தக் கட்சிக்கு எதிரான தமது பரப்புரைகளைத் தீவிரப்படுத்தி இருந்ததையும் பார்க்க முடிந்தது. இருந்தும் யேர்மனிக்கான மாற்றுக் கட்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

2029ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சக்ஸோனி-அன்ஹால்ற் மாநிலத் தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அதேவேளை தலைநகர் பேர்லின் மாநிலத் தேர்தல் செப்டெம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகள் அங்கு பெருமளவில் செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. நாளுக்கு நாள் யேர்மனிக்கான மாற்றுக் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. தற்போதைய நிலையில் நாடளாவிய அடிப்படையில் 28 விழுக்காடு மக்கள் அந்தக் கட்சியை ஆதரிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஜனாதிபதி பிரடெரிக் மெயற்ஸ் அவர்களைப் பிரிதிநிதித்துவம் செய்யும் ‘கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி’யின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டு வருகின்றது. தற்போதைய நிலையில் இந்தக் கட்சியை 20 வீதமான மக்களே ஆதரிக்கின்றனர். யேர்மன் தொலைக்காட்சியால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று தற்போதைய அரசாங்கத்தின் மீது 87 விழுக்காடு மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. அதேவேளை, கடந்த முப்பது ஆண்டுகளில் மக்களின் செல்வாக்கை அதிகம் இழந்த ஒரு தலைவராக மெயற்ஸ் உள்ளார் என்பதுவும் கருத்துக் கணிப்புகளின் முடிவாக உள்ளது.
 
2.1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறிய மாநிலமே சக்ஸோனி-அன்ஹால்ற். செப்டெம்பர் 6ஆம் திகதி அங்கு நடைபெற்ற தேர்தலில் 77.8 விழுக்காடு மக்கள் பங்கெடுத்து இருந்தனர். இந்த எண்ணிக்கை சராசரியை விடவும் அதிகமானது. 13க்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 6 கட்சிகள் மாத்திரமே 5 விழுக்காடு வாக்குகள் என்ற வெட்டுப் புள்ளியைத் தாண்டி மாநில அவைக்குள் பிரவேசிக்கின்றன.

 
மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி 17.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் இந்தக் கட்சி 19.9 விழுக்காடு வாக்குச் சரிவைச் சந்தித்துள்ளது.  மற்றொரு கூட்டணிக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி 9.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை வென்றுள்ளது. அதேவேளை, இந்தக் கட்சியின் வாக்கு வங்கி 0.9 விழுக்காட்டால் அதிகரித்து உள்ளது.

 

8.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ள பசுமைக் கட்சி 8 ஆசனங்களை வென்றுள்ளது. இந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 3.0 வீதத்தால் உயர்ந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது.
 
மேனாள் சோசலிச கிழக்கு யேர்மனியில் பலமாக விளங்கிய இடதுசாரிக் கட்சி 8.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்சியின் வாக்கு வங்கியில் 2.4 சதவீத சரிவு அவதானிக்கப்பட்டுள்ளது.

2024 யனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மிக இளைய கட்சியான சஹ்ரா வாகன்நெக்ற் கூட்டமைப்பு 5.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் தடவையாக மாநில நாடாளுமன்றம் ஒன்றில் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 5 ஆசனங்களைக் கொண்டுள்ள இந்தக் கட்சி யேர்மனிக்கான மாற்றுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் பட்சத்தில், ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே ஆட்சியதிகாரத்தில் பங்கு கொண்ட கட்சியாக விளங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட இந்தக் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சியாக அறிப்படும் யேர்மனிக்கான மாற்றுக் கட்சியுடன் கூட்டுச் சேருமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டிய விடயம்.

சக்ஸோனி-அன்ஹால்ற் மாநிலத் தேர்தலில் யேர்மனிக்கான மாற்றுக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள போதிலும், அந்தக் கட்சி ஆட்சியமைப்பதை ஏனைய கட்சிகள் அனுமதிக்குமா என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது. யேர்மனியில் உள்ள பாரம்பரிய அரசியல் கட்சிகள் இந்தக் கட்சியை ஒரு தீண்டத்தகாத கட்சியாகக் கருதிச் செயற்பட்டு வரும் நிலையில், மாநில அவையில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத அந்தக் கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.
 
மத்தியில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக யேர்மனுக்கான மாற்றுக் கட்சி உள்ள போதிலும், முக்கிய படைத் துறைத் தகவல்களை அந்தக் கட்சியுடன் பகிர்ந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்போது ஒரு மாநில அரசாங்கத்தை அந்தக் கட்சி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வாய்ப்பு உள்ள நிலையில் அத்தகைய கொள்கையைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

யேர்மனியில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகள், அகதிகளின் வருகை தொடர்பான பிரச்சனைகள் என்பவற்றுக்கும் அப்பால் உக்ரைன் போரை மத்திய அரசாங்கம் வெகுவாக ஆதரித்து நிற்பதுவும், ரஸ்யாவிடம் இருந்து வருவதாகச் சொல்லப்படும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக படைத் துறைக் கட்டுமானங்களை வலுப்படுத்துதல், செலவினங்களை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களும் நடைபெற்று முடிந்த மாநில அவைத் தேர்தலில் மிகப் பாரிய பரப்புரை விடயங்களாக அமைந்திருந்தன. யேர்மனிக்கான மாற்று உள்ளிட்ட கட்சிகள் உக்ரைனுக்கான யேர்மனியின் படைத் துறை மற்றும் பொருண்மிய உதவிகள் தொடர்பாகவும், ரஸ்யாவிடம் இருந்து மலிவான விலையில் பெறப்பட்ட இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பாகவும் விமர்சனங்களைக் கொண்டுள்ளன. ரஸ்யாவுடனான துண்டிக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளை மீளவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இத்தகைய கட்சிகள் சக்ஸோனி-அன்ஹால்ற் மாநிலத் தேர்தலில் 57.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

ஆனால், தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் மத்திய அரசின் அடிப்படைக் கொள்கைகள் மாறப் போவதில்லை என ஜனாதிபதி மெயற்ஸ் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தனது கட்சி மக்களை விட்டு விலகிச் சென்றதே காரணம் எனக் கூறியுள்ள அவர் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளும் வகையில் கருத்துத் தெரிவித்து உள்ளார்.

எனினும், சக்ஸோனி-அன்ஹால்ற் மாநிலத் தேர்தல் முடிவுகள் யேர்மனியைக் கடந்தும் அதிர்வலைகளைத் தோற்றுவித்து நிற்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை தனது தனிப்பட்ட வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தீவிர வலதுசாரிகளின் எழுச்சி வரவேற்புக்குரிய ஒரு விடயம் அல்ல. ஆயினும் மக்களின் விருப்பம் அதுவாக இருக்கையில் அதனை யாரால் தடுத்துவிட முடியும்? காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. யேர்மனியின் எதிர்காலம் மீண்டும் நாசிக்களின் எழுச்சிக்கு வித்திடாமல் இருந்தால் அதுவே சிறப்பு.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a comment

Comment