ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலை 17ஆம் திகதி ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த நிலையில், ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, குறித்த அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை சீன அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சீன அமைப்புகளின் பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா அமெரிக்காவை உளவு பார்ப்பதாகக் கூறப்படும் தகவல்களை மறுக்கவில்லை.
“அவர்கள் நம்மை உளவு பார்க்கிறார்கள். நாங்களும் அவர்களை உளவு பார்த்து வருகிறோம். அவர்களும் அதையே செய்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செயற்கைக்கோள் படங்களை ஈரானுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சீன அதிகாரிகள் கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஈரானுக்கு சீனா உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சீன தரப்பு ஏற்கவில்லை. ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என சீனாவை ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
மேலும், ஈரானுக்கு உதவியதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த 3 செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடையும் விதித்துள்ளது.
ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா, அந்நாட்டின் பெருமளவிலான எண்ணெய் உற்பத்தியை கொள்முதல் செய்து வருவதுடன், ஈரானுக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி வெள்ளை மாளிகைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உளவுக் குற்றச்சாட்டு அமெரிக்கா - சீனா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


