china discovers gold, silver deposits in pacific: சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் ஆழ் கடல் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ளனர்.
சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம், கிங்டாவோ கடல்சார் புவியியல் நிறுவனம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்டனர்.
‘சியாங் யாங் ஹாங் 10’ (Xiang Yang Hong 10) என்ற சீனாவின் அதிநவீன ஆராய்ச்சி கப்பல் மூலம், 18 நாள் மேற்கொண்ட ஆய்வில் தங்கம், வெள்ளி படிவங்களை கண்டறிந்துள்ளனர்.
கனிமங்கள் நிறைந்த மிகவும் சூடான திரவங்கள், கடலடித் தரையில் உள்ள விரிசல்கள் வழியாக மேல்நோக்கிக் கசியும் ஒரு வெப்பநீர்மப் பகுதியில் இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் படிவுகள் கண்டறியப்பட்டன.
இந்த வெப்பநீர்ம சல்பைடுப் படிவு, 3 பெரிய கூம்பு வடிவ கனிம அமைப்புகளைக் கொண்டுள்ளது.
இதற்கு முந்தைய பயணங்களில், 700 முதல் 1,500 மீட்டர் ஆழத்தில், 315 டிகிரி செல்சியஸ்கும் அதிகமான திரவ வெப்பநிலையுடன் கூடிய டஜன் கணக்கான உயர்-வெப்பநிலை நீராவித் துவாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தரைவழிப் படிவுகளுடன் ஒப்பிடுகையில், தங்கம் மற்றும் வெள்ளியின் சராசரி செறிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட ஆய்வில், ஒரு அமெரிக்க ஷார்ட் டன் தாதுவில் தங்கத்தின் செறிவு 0.45 ட்ராய் அவுன்ஸ் (0.4937 அவுன்ஸ்) வரையிலும், வெள்ளியின் தரம் 36.3 ட்ராய் அவுன்ஸ் (39.83 அவுன்ஸ்) வரையிலும் உள்ளது.
இந்த வெப்பநீர்மப் பகுதியில் இறால், நண்டுகள், சிப்பிகள் போன்ற உயிரினங்கள் செழித்து வளருவதையும் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த படிவுகள் சீனாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு பின் வளைவுப் படுகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஆழ்கடலில் நிலவும் உயர் அழுத்தம், தொழில்நுட்ப சிக்கல்கள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் சுரங்கப் பணிகளுக்கு தற்போது தயாராக இல்லை என கூறப்படுகிறது.
ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட வளங்களால் இந்தக் கடலடிப் பகுதி பொருளாதார முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.


