TamilsGuide

சூப்பர் மேன் இல்ல, ஆனா ஒரு சூப்பர் பவர் இருக்கு - விரைவில் வெளியாகும் பீப் படம் குறித்து நடிகர் ராகவ்!... 

படத்தின் தலைப்பு குறித்துப் பேசிய ராகவ், “நாம் ஒரு விஷயம் கேட்கக் கூடாது என்று நினைக்கும் போது அந்த இடத்தில் 'பீப்' சத்தம் போடுகிறோம். அதாவது, துண்டிக்கப்பட்ட குரல்கள் அல்லது வெளியில் சொல்லப்படாத விஷயங்கள் என்று இதற்கு அர்த்தம் கொள்ளலாம்.

சமூகத்தில் வழக்கமாக வெளியில் சொல்லப்படாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இந்த படத்தில் தொட்டிருக்கிறோம். இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஒரு பக்கா கிரைம் த்ரில்லராக இருக்கும்” என்றார்.

படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “படத்தின் ஹீரோவுக்கு ஒரு விதமான 'சூப்பர் பவர்' இருக்கிறது. ஆனால், அவர் வழக்கமான சினிமா சூப்பர் மேன் கிடையாது.

நிஜ வாழ்க்கையில் சில மனிதர்கள் 4 டிஜிட் பெருக்கல் கணக்குகளை நொடிப் பொழுதில் சொல்வார்களே, அதுபோன்ற ஒரு எதார்த்தமான சூப்பர் பவர் தான் அது. நிஜ வாழ்வில் அப்படி ஒரு பவர் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் அழகாகக் காட்டியுள்ளார்.

எனது கதாபாத்திரத்தின் மேனரிசங்கள் அனைத்தும் இயக்குநரின் கற்பனையே. படத்தை முன்கூட்டியே பார்த்த என் மனைவியே, 'உன்னை இயக்குநர் முற்றிலும் வேறு மாதிரி காட்டியுள்ளார்' என்று ஆச்சரியப்பட்டார்,” எனக் குறிப்பிட்டார்.

படத்தில் இடம்பெற்ற சவாலான ஆக்ஷன் காட்சி பற்றிப் பகிர்ந்த ராகவ், “ஒரு முக்கியமான காட்சிக்காக 17-வது மாடியில் இருந்து கயிறு கட்டி 10-வது மாடி வரை தலைகீழாக இறங்குவது போல படமாக்கினார்கள்.

அது எனக்கு மிகப்பெரிய சவாலாகவும் ரிஸ்க்காகவும் இருந்தது. ஒரு நடிகனாக இந்த அளவுக்கு நாம் ரிஸ்க் எடுத்துதான் ஆக வேண்டும்.

எனக்கு 'தனி ஒருவன்' படத்தில் அரவிந்த் சாமி நடித்தது போன்ற ஒரு பவர்புல்லான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

இது தவிர நானும் சில கதைகளை எழுதி வைத்துள்ளேன், அதையும் விரைவில் இயக்குவேன் ,” என்றார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் மக்களிடம் நல்

ல வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகனின் உதவி இயக்குநரான தினா ராகவனிடம் இணை இயக்குநராக இருந்த இல. சண்முகசுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன.

ஆனால், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசை படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு கதையை நகர்த்துவதில் இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசிகர்கள் தியேட்டரில் அமர்ந்து தாங்களே கதையோடு பயணித்து, சில கணக்குகளைப் போட்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போன்ற ஒரு சுவாரசியமான திரைக்கதை இதில் உள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

நடிகர் ராகவ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பீப்' திரைப்படத்தை இல. சண்முக சுந்தர் இயக்கியுள்ளார். இதற்கு பிரசாந்த் விஹாரி இசையமைக்க, பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும், இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை அபிஷேக் மற்றும் விக்னேஷ் கவனிக்க, சண்டைக் காட்சிகளை ராம்குமார் வடிவமைத்துள்ளார்.
 

Leave a comment

Comment