TamilsGuide

லண்டனில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம் - முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் விஜய், இன்று நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று உள்ளார். அதற்காக அவர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டார். துபாய் வழியாக லண்டன் சென்ற விஜய், நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் காத்திருந்த பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், த.வெ.க. துரைகண்ணன் மற்றும் பிரிட்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து விஜய், 'ஷாங்க்ரி-லா தி ஷார்ட்' ஓட்டலுக்கு சென்றார். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தி ஷார்ட் கட்டிடத்தில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. கட்டிடத்தின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை ஓட்டல் செயல்படுகிறது.

ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான 'தி ஷார்டில்' அமைந்துள்ளதால், ஓட்டலின் அறைகளில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் லண்டனின் நகரை பார்க்க முடியும். இந்த ஓட்டலில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸ்கியூட்வ் அறைகள் உள்ளன.

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே முதலமைச்சர் விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இன்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலுக்கு முதலமைச்சர் விஜய் செல்கிறார். அங்கு நடைபெறும் மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் பச்சை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். அவருடன் இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டி. இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணிக்கு நிறைவடைகிறது.
 

Leave a comment

Comment