Houthis threaten Saudi oil exports in the Red Sea: செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹவுதிகள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
ஈரான் ஆதரவு ஹவுதிகள் யேமனின் துறைமுக நகரமான மோச்சாவைக் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமாக அதி முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளை நோக்கி முன்னேறி வருவதாக இராணுவ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க இடைத் தேர்தல்களுக்குப் பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
இதனிடையே, செங்கடலின் தெற்கு முனையும், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றானதுமான பாப் அல்-மண்டேப் நீரிணையின் மீது ஹவுதிகள் மேலும் ஆதிக்கம் செலுத்தி, ஹனிஷ் தீவுகளை நெருங்கிவிட்டதாக யேமன் அரசாங்க இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹார்முஸ் நீரிணைக்கு எதிர்ப்புறத்தில், அரேபிய தீபகற்பத்தில் உள்ள நீர்வழியை ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது அமெரிக்காவுடனான போரில் அவர்களின் ஆதரவாளரான ஈரானுக்கு ஒரு முக்கிய சாதகத்தை அளித்து, இரண்டாவது பெரிய போக்குவரத்து வழித்தடத்தின் வழியாக விநியோகங்களைக் குறைத்து, எண்ணெய் விலைகளை கடுமையாக உயரச் செய்யும்.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்கு முன்னதாக, தனது குடியரசுக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதித்துள்ள ஒரு போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவதை இது ட்ரம்ப்புக்கு மேலும் கடினமாக்கக்கூடும்.
இதனிடையே, சவுதி கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும் செங்கடல் வழித்தடப் போக்குவரத்து பாதுகாப்பானது என்று ஏமனில் ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, செங்கடல் வழித்தடத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; ஏனெனில், உலகளாவிய எண்ணெய் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து சென்ற ஹார்முஸ் நீரிணைப் பாதை, ஈரானுடனான மோதலால் நடைமுறையில் முடக்கப்பட்டுள்ளது.
ஏமன் அரசுப் படைகளும் அவற்றின் கூட்டாளிகளும் செங்கடல் கடற்கரையோரமாகத் தெற்கு நோக்கி நகர்ந்து, பாப்-எல்-மண்டேப் நீரிணையில் உள்ள துபாப் (Dhubab) பகுதிக்குச் சென்று கொண்டிருப்பதாக அரசு இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
துபாப் மற்றும் அப்பகுதியிலுள்ள பெரிம் தீவு (Perim Island) ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அந்த நீரிணையின் மீதான ஆதிக்கத்தைப் பெறுவதற்கு மிக முக்கியமானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஹவுதிகளுக்கு எதிரான முற்றுகை அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் ஏமன் மோதலுக்குத் தீர்வு காண முடியாது என்று கூறிய ஈரானின் வெளிவிவகார அமைச்சகம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது; அதேவேளையில், இதில் ஈரானின் உரிமை என்ன என்பது குறித்து அது எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த வாரம் கடற்கரையோரமாக ஹவுதிகள் முன்னேறியது, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நேரடி வழிகாட்டுதலின்படியே நிகழ்ந்தது என யேமன் அரசாங்கம், ஈரான் மற்றும் பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


