TamilsGuide

தலவத்துகொட கொள்ளைச் சம்பவம் - ஒருவர் கைது

தனியார் நிறுவனமொன்றில் 64,995,000 ரூபா பணமும் 11,250,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2026.09.01 அன்று, தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், கத்திகளைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி, குறித்த நிறுவனத்தில் இருந்த 64,995,000 ரூபா பணத்தையும், 11,250,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, குறித்த குற்றச் செயலை மேற்கொள்வதற்காக சந்தேகநபர்கள் பயணித்த காரின் சாரதியாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவர், 2026.09.09 அன்று பகல் வேளையில் கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பிரதேசத்தில் வைத்து, மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய வெலிவிட்ட, கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, கொள்ளையிடப்பட்ட பணம் சந்தேகநபர்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதன்படி, குறித்த சந்தேகநபருக்குக் கிடைத்த பணத்தில் 16,200,000 ரூபா, அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும், மற்றுமொரு நபரிடம் வழங்கப்பட்டிருந்த நிலையிலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் குறித்த குற்றச் செயலை மேற்கொள்வதற்காக பயன்படுத்திய போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட காரை, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த காரும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றச் செயலை மேற்கொள்வதற்காக ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சந்தேகநபரின் வீட்டில் இருந்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment