TamilsGuide

பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் - கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.

அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.

கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர்.

கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார்.

அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார். 

Leave a comment

Comment