TamilsGuide

கனடாவில் விசித்திர உடையில் சிறுமியை துரத்திய நபருக்கு வலைவீச்சு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் கெலோனா பகுதியில், 'கேட் இன் த ஹேட்' கதாபாத்திர உடையில் வந்து சிறுமி ஒருவரைத் துரத்திய நபரை கனடிய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆகஸ்ட் 24 இரவு சுமார் 9.00 மணியளவில் ஷாம்ரோக் டிரைவ் பகுதியில் நடந்து சென்ற சிறுமி ஒருவரை, விசித்திர உடையணிந்த நபர் துரத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்று சேர்ந்த நிலையில், சந்தேகநபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இரவு வேளையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் போட்ட தொப்பியுடன் கூடிய 'கேட் இன் த ஹேட்' ஆடை அணிந்து நபர் ஒருவர் நிற்கும் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஒரு "கவலைக்குரிய விளையாட்டுச் செயலாக" பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய உடைகளை அணிவது குற்றமில்லை என்றாலும், மற்றொரு நபருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பின்தொடர்வது குற்றவியல் துன்புறுத்தலாக கருதப்படும் எனப் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

விளையாட்டாகச் செய்திருந்தாலும், ஒரு சிறுமியைப் பின்தொடர்ந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துவது மிகவும் கவலைக்குரியது. இத்தகைய கேலிச் செயல்கள் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொலிஸ் அதிகாரி டெவோன் கெரிட்ஸ் எச்சரித்துள்ளார்.

சம்பவப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வாகனங்களின் டேஷ்கேம் பதிவுகள் வைத்திருப்போர் உடனடியாகத் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குழந்தைகள் தங்களை யாராவது பின்தொடர்வதாக உணர்ந்தால், உடனடியாக மக்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் எனவும், ஆபத்தான சூழலில் 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க வேண்டும் எனவும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a comment

Comment