ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு, இரவு 9.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் முஸ்தாங் மாவட்டத்தைத் தவிர, அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பில் இதுவரை உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நிலைமைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


