அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் கியூபாவின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்கத் தடைகள் காரணமாக 2025ஆம் ஆண்டில் மட்டும் கியூபாவுக்கு 8.1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது முந்தைய ஆண்டை விட சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட எண்ணெய் தடைகள் காரணமாக கியூபாவின் எரிபொருள் விநியோகமும் மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டுகள் இடம்பெறுவதுடன், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபா அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
கியூபா மக்கள் நீண்ட நேர மின்வெட்டுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கியூபா மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகம் அந்தத் தடைகள் கியூபா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.
இதேவேளை, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர முன்னேற்றம் தற்போது முடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன


