நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். கவிஞர் இருக்கிறாரா?” என்று கேட்டவுடன், தன் நிலைக்கு வந்து, “அப்பா வெளியே போய் இருக்காங்க” என்று சொல்கிறேன்.
“சரி நான் பேசிக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு போனை கட் செய்கிறார்.
ஒரு முதலமைச்சர் தன் உதவியாளரிடம், "கவிஞருக்கு போன் போட்டுத் தா" என்று சொல்லி இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர், அப்பாவுக்கு போன் செய்யும் போதெல்லாம் அவரே தான் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுவார்.
அப்பா போனில் பேசும் போது, ‘டேய்’ என்று உரிமையாகப் பேசினால், அது எம்.எஸ்.விஸ்வநாதன். ‘முதலாளி’ என்று பேசினால், அது சிவகாசி ராஜசபை அல்லது யாசின் பாய்.
“ஆண்டவனே” என்று பேசினால், அது எம்.ஜி.ஆர். அப்பாவும் அவரை, ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார்.
அப்பாவின் எழுத்துத் திறமை மீது, எம்.ஜி.ஆர். மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார்.
“கண்ணதாசன் என்ற கவிஞர் பேசப்படுவது போன்று, கண்ணதாசன் என்ற வசனகர்த்தாவும் பேசப்பட்டிருக்க வேண்டும். பாடல்களில் செலுத்திய அதே கவனத்தையும், உழைப்பையும், வசனம் எழுதுவதில் அவர் செலுத்தி இருந்தால், இளங்கோவனுக்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட வசனகர்த்தாவாக அவர் இருந்திருப்பார்” என்று எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்லி இருக்கிறார்.
‘மதுரை வீரன்’, ‘மகாதேவி’, ‘மன்னாதி மன்னன்’, ‘நாடோடி மன்னன்’ என்று எம்.ஜி.ஆர். படங்களில், அப்பா எழுதிய வசனம் அன்று பரபரப்பாக பேசப்பட்டது.
‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தொடங்கி, எம்.ஜி.ஆரே இயக்கி நடித்தார். தன் சொத்துக்களை அடமானம் வைத்து, அந்தப் படத்தைத் தயாரித்தார்.
“இந்தப் படம் வெற்றி பெற்றால், நான் மன்னன். தோல்வி அடைந்தால், நான் நாடோடி” என்று அவரே சொல்லி இருந்தார்.
‘மகாதேவி’, ‘மதுரை வீரன்’ படங்களின் வெற்றிக்குக் கண்ணதாசனின் வசனங்களும் ஒரு காரணம் என்பதை எம்.ஜி.ஆர். உணர்ந்திருந்ததால், தனது ‘நாடோடி மன்னன்’ படத்துக்கும் கண்ணதாசன் தான் வசனம் எழுத வேண்டும் என்று விரும்பி, அப்பாவை ஒப்பந்தம் செய்தார்.
அந்தக் கால கட்டத்தில் அப்பாவுக்கு சொந்தப் படம் காரணமாகவும், அரசியல் காரணமாகவும் பல பிரச்சினைகள். அதனால், ‘நாடோடி மன்னன்’ படத்துக்கான வசனங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு போன் செய்து அவரை சந்தித்துப் பேச நேரம் கேட்டார். அவரும், “உடனே வாருங்கள்” என்று சொல்லி விட்டார்.
எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு போனார் அப்பா. “வாங்க ஆண்டவனே என்ன விஷயம்?” “இல்ல ஆண்டவனே. அது வந்து…” என்று அப்பா தயக்கமாக பேசுகிறார்.
அப்பா ஏதோ மனநிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர், “சரி. முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் பேசலாம்” என்கிறார்.
இருவரும் சாப்பிடுகின்றனர்.
சாப்பிட்டு முடிந்த பின், ‘இப்ப சொல்லுங்கள்’ என்று எம்.ஜி.ஆர். கேட்க, “ஆண்டவனே, எனக்கு இப்ப நிறைய பிரச்சினைகள் இருக்கு”.
“பணப் பிரச்சினைனா, கவலைப்படாதீங்க, நான் தரேன்”.
“இல்லை ஆண்டவனே, எழுத்தில் முழு கவனமும் செலுத்த முடியாத அளவுக்கு வேற வேற பிரச்சினைகள். நீங்க உங்க வாழ்க்கையை ரிஸ்க் எடுத்து, இந்தப் படத்தை ஆரம்பிச்சு இருக்கீங்க. இந்தப் படத்துக்கு வசனம் பக்கபலமா இருக்கணும்னு சொல்லி இருக்கீங்க. என்னுடைய பிரச்சினைகளால் உங்களைப் பிரச்சினைக்கு உள்ளாக்க நான் விரும்பல. இந்தப் படம் வெற்றி பெற்று, நீங்க மன்னனா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அதனால இந்தப் படத்துக்கு மட்டும் நீங்க வேற யாரையாவது வசனம் எழுதச் சொல்லுங்க”.
எம்.ஜி.ஆர் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. எழுந்து சிந்தனையுடன் மேலும் கீழுமாக நடக்கிறார். பின் திரும்பி வந்து அப்பாவின் அருகில் அமர்ந்து, “நீங்க எதுக்காக சொல்றீங்கனு எனக்கு தெரியுது. ஏனோ தானோனு எழுதித் தராம, முடியாதுனு சொன்னதே உங்க மனசைக் காட்டுது. எனக்காக ஒரு உதவி செய்யணும்".
“என்ன உதவி?”
“இந்தப் படத்துக்கு உயிர்நாடினு சில காட்சிகளை உருவாக்கி வச்சிருக்கேன். அந்தப் பதினைந்து காட்சிகளுக்கு மட்டும் நீங்க வசனம் எழுதித் தாங்க. மற்ற வசனங்களை நான் ரவீந்தரை வச்சு எழுதிக்கிறேன்.”
அப்பாவும் அதை ஏற்றுக் கொண்டு அந்தப் பதினைந்து காட்சிகளுக்கு வசனம் எழுதித் தந்தார்.
“நான் சாதாரண குடியில் பிறந்தவன். பலமில்லாத மாடு, உழ முடியாத கலப்பை, அதிகாரம் இல்லாத பதவி, இவைகளை நாங்கள் விரும்புவதே இல்லை”.
“மக்களின் நிலையறியாதவன் நானா, நீங்களா? நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கின்றவன்.”
“என் உருவம் மாறி இருக்கிறது. என் உள்ளம் மாறவில்லை.”
“அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள்.”
“தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்க மாட்டார்கள்.”
“என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை.”
படத்தில் இடம் பெற்ற அப்பாவின் வசனங்களில் சில துளிகள் இவை. அப்பா எழுதித் தந்த பதினைந்து காட்சிகளையும் அப்படியே மனப்பாடமாக எம்.ஜி.ஆர். சொல்லுவார்.
அண்ணாதுரை கண்ணதாசன்:


