Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.
வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..
அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


