TamilsGuide

கனடா நாட்டில் நான் தரிசித்த பிள்ளையார் மூலமூர்த்தியாக உள்ள திருக்கோவில்கள்

கனடா நாட்டில் நான் தரிசித்த பிள்ளையார் மூலமூர்த்தியாக உள்ள திருக்கோவில்கள்

(விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் பதிவு_
- கிருஷ்ணா சிவப்பிரகாசம்.
கனடாவில் உள்ள பெரும்பாலான இந்துத் திருக்கோவில்களில் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். விநாயகருக்குரிய சிறப்பு வழிபாடுகளும் பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக சைவத் திருக்கோவில்களில் பிள்ளையார் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருப்பார். எந்தவொரு வழிபாடாக இருந்தாலும், முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே ஏனைய தெய்வங்களுக்கான வழிபாடுகள் தொடங்குவது நமது மரபாகும்.
ஆனால், பிள்ளையாரையே மூலமூர்த்தியாகக் கொண்டு அமைந்த திருக்கோவில்களும் கனடாவில், குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் நகரப் பகுதிகளில், பல உள்ளன.
அவற்றில் நான் தரிசித்த சில ஆலயங்களைப் பற்றிய எனது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
1. றிச்மன்ட் ஹில் கணேசா ஆலயம்
கனடாவில் தோன்றிய ஆதிகால இந்து ஆலயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இவ்வாலயம், பல பக்தர்களாலும் தொடர்ந்து வழிபடப்படும் ஒரு பெரிய பிள்ளையார் திருக்கோவில்.
இங்கு பிள்ளையாருக்குரிய வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. குறிப்பாக உற்சவ காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபடுகின்றனர்.
ரொறன்ரோவின் அண்டை நகரமான றிச்மன்ட் ஹில்லில் அமைந்துள்ள இவ்வாலயத்துக்கு வருடத்தில் பலமுறை தரிசனம் செய்யச் சென்றிருக்கிறேன்.
மன அமைதியுடன் அமர்ந்து இறைவனை வழிபடுவதற்கு ஏற்ற ஆலயம் இது. ஆலயமும் அதன் சுற்றுப்புறமும் விசாலமாக இருப்பதால், அவசரமின்றி சென்று இறைவனை தரிசித்து, ஆறஅமர்ந்து மனநிறைவுடன் திரும்பி வரக்கூடியதாக உள்ளது.
2. ஸ்காபரோ வரசித்தி விநாயகர் ஆலயம்
ரொறன்ரோ மாநகரப் பகுதியில், ஸ்காபரோ நகரில் அமைந்துள்ள மற்றுமொரு சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயம் இது.
இவ்வாலயம் அமைந்துள்ள பகுதிக்கு பேருந்து வசதிகள் இருப்பதால், பொதுப் போக்குவரத்து மூலம் எளிதாகச் சென்றுவர முடியும்.
இந்த ஆலயத்துக்கு நான் முன்னர் பலமுறை சென்றிருக்கிறேன். அண்மையில் ஆலயத்தின் உட்புறம் கருங்கல்லால் அழகாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அந்தப் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் அமையவில்லை.
ஆனால், கருங்கல்லால் அமைக்கப்பட்ட ஆலயம் மிகவும் அழகாகவும், மனதை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளதாகப் பலரிடம் கேட்டிருக்கிறேன். படங்களிலும் பார்த்திருக்கிறேன்.
பிள்ளையாருக்குச் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதையும் காண முடிகிறது.
கனடாவில் தரிசிக்க வேண்டிய பிள்ளையார் ஆலயங்களின் பட்டியலில் இவ்வாலயத்துக்கும் முக்கியமான இடம் உண்டு.
3. பிராம்ப்டன் கற்பக விநாயகர் ஆலயம்

ரொறன்ரோவின் புறநகரான பிராம்ப்டனில் அமைந்துள்ள இவ்வாலயம், அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
உற்சவங்கள் மட்டுமன்றி, அன்றாடப் பூஜைகள் அனைத்தும் நேர்த்தியாகவும் முறையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் ஆலய நிர்வாகத்தினர் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர்.
வழிபட வரும் பக்தர்கள் மனத்திருப்தியுடன் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் இவ்வாலயத்தினர் மேற்கொள்ளும் முயற்சியை நேரில் காண முடிகிறது.
பிராம்ப்டன் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவ்வாலயத்துக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபடுவது எனக்கு வழக்கமாக உள்ளது.
4. செல்வ விநாயகர் ஆலயம் — கணபதீஸ்வரம்
செல்வ விநாயகர் ஆலயம் என்றும், கணபதீஸ்வரம் என்றும் அழைக்கப்படும் இவ்வாலயமும் ஸ்காபரோ நகரில் அமைந்துள்ளது.
உட்புறத்தில் விசாலமான பரப்பைக் கொண்ட இவ்வாலயத்தின் மூல விநாயகரின் திருமேனி மிகவும் அற்புதமானது.
திருவிழாக் காலங்களில் இவ்வாலயத்துக்குச் சென்றிருக்கிறேன். அந்நேரங்களில் ஆலயம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டு, ஜெகஜோதியாகக் காட்சியளிக்கும்.
இங்கு நடைபெறும் உற்சவங்களும் மிகவும் விமரிசையாக இடம்பெறுகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற சப்பறத் திருவிழாவையும் ஆலயத்திற்கு வெளியில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விநாயகப் பெருமானின் திருவீதி வலம் மனதைத் தொட்ட ஒரு அனுபவமாக இருந்தது.
5. ரொறன்ரோ மஹாகணபதி ஆலயம்
ரொறன்ரோ நகருக்குள் அமைந்துள்ள மஹாகணபதி ஆலயம் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
உண்மையைச் சொல்வதானால், இதுவரை இவ்வாலயத்துக்குச் சென்று தரிசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை.
எனவே, நேரில் சென்று தரிசித்த பின்னர், அங்குள்ள சிறப்புகள் மற்றும் எனது அனுபவங்களைப் பற்றி விரிவாக எழுத விரும்புகிறேன்.
இவ்வாலயத்தைப் பற்றி அறிந்தவர்கள், அதன் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.
6. மீசாலை வீரகத்தி விநாயகர் ஆலயம் (கனடா)
இது அண்மைக் காலத்தில் தோன்றிய பிள்ளையார் திருக்கோவில் என்று அறிகிறேன்.
இவ்வாலயம் பற்றிய முழுமையான அனுபவம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. நேரில் சென்று தரிசித்து, ஆலயத்தின் சிறப்புகளை அறிந்த பின்னர் அதைப் பற்றியும் எழுதுவேன்.
இன்னும் பல பிள்ளையார் ஆலயங்கள்...
மேலே குறிப்பிட்டவை தமிழர்களால் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும் பிள்ளையார் ஆலயங்களில் நான் தரிசித்தவை அல்லது எனக்குத் தெரிந்தவை.
இதற்கு அப்பால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் அமைக்கப்பட்ட விநாயகர் ஆலயங்களும் கனடாவில் உள்ளன. அவர்களுடைய ஆலய அமைப்பும், வழிபாட்டு முறைகளும், தமிழர்களின் ஆலய மரபுகளிலிருந்து சில வகைகளில் வேறுபட்டிருக்கலாம்.
தமிழர்கள் அதிகமாக வாழும் ஒட்டாவா, மொன்றியால் போன்ற பகுதிகளில் பிள்ளையாரை மூலமூர்த்தியாகக் கொண்ட ஆலயங்கள் இருப்பதாக எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதேவேளை, வன்கூவர் நகரிலும் பிள்ளையார் ஆலயம் ஒன்று இருப்பதாக அறிகிறேன்.
இங்கு நான் குறிப்பிட்டிருப்பவை நான் தரிசித்த ஆலயங்களும், எனக்குத் தெரிந்த ஆலயங்களும் மட்டுமே.
கனடாவின் வேறு பகுதிகளில் மேலும் பிள்ளையார் ஆலயங்கள் இருந்தால், அவற்றைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்.
தெரிந்தவர்கள் ஆலயத்தின் பெயர், அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பதிவிடுங்கள்.
வாய்ப்பு கிடைத்தால் அந்த ஆலயங்களுக்கும் சென்று, விநாயகப் பெருமானைத் தரிசித்து, அதன் அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிள்ளையார் துணை!
விநாயகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

 

Siva Krishna

Leave a comment

Comment