TamilsGuide

ராஜா ராஜாதான்.. டோரதி படத்தில் பின்னணி இசைகள் வெளியீடு

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தின் பின்னணி இசை வெளியாகி உள்ளது.

மதுரையைப் பின்னணியாகக் கொண்ட 'டோரதி' படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை தம்மம் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜும் இயக்கத்தில், சிக்யா என்டர்டெயின்மென்ட் சார்பில் குனீத் மோங்காவும், ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டேவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அண்மையில் படத்தின் இரண்டாவது பாடலான 'முத்துமணி' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக முதல் சிங்கிளாக 'கல்யாண விருந்து' பாடலும் 90ஸ் ராஜாவை மீண்டும் கண் முன் காட்டியதாக கொண்டாடப்பட்டது.

இசைஞானி இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் இது 1540வது திரைப்படமாகும். 'முத்துமணி' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலாகும். இப்பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பின்னணிப் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார்.

இதனிடையே, டோரதி திரைப்படத்தின் பின்னணி இசைகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், 18 பின்னணி இசைத்துணுக்குகள் இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக, இளையராஜாவின் சிறந்த பிஜிஎம்களில் ஒன்றான 'How to name it' ஆல்பத்தில் இடம்பெற்ற 'Do anything' இசை நவீனப்படுத்தப்பட்டு இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள, ஏதும் இல்லை, சம்பவம், பிரியாவிடை உள்ளிட்ட பின்னணி இசைத் துணுக்குகள் வரவேற்பை பெற்று வருகின்றன.

இப்படம், உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய முதன்முறைத் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவையும், கணேஷ் சிவா படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து, 'டோரதி' திரைப்படம் வரும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
 

Leave a comment

Comment