TamilsGuide

பிரபலமாக ஆசைப்பட்ட இலங்கை தமிழ் பெண் - தோஷம் இருப்பதாக பணம் பறித்த கிளி ஜோதிடர்

பிரபலமாக ஆசைப்பட்ட கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணிடம், தோஷம் கழிப்பதாக கூறி கிளி ஜோதிடர் ஒருவர் ஆடையில்லாத வீடியோவை பதிவு செய்து அதனை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

கனடா குடியுரிமை பெற்ற 37 வயது இலங்கை தமிழ்ப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர், பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். 

உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர் ஒருநாள் சுற்றிப் பார்ப்பதற்காக பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். 

ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டிருந்த அவர், அங்கிருந்த இசக்கி முத்து என்ற கிளிஜோதிடர் ஒருவரிடம் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார்.

அவர் அந்தப் பெண்ணின் கடந்த காலம் மற்றும் தனிப்பட்ட விடயங்கள் குறித்து பல்வேறு தகவல்களை கூறவே அந்தப் பெண்ணுக்கு ஜோதிடர் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த ஜோதிடருக்கு ரூ.20,000 பணம் கொடுத்துள்ளார். 

அப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஜோதிடரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட ஜோதிடர் இசக்கி முத்து அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் தோஷம் ஏற்பட்டுள்ளது. அதனை நீக்க சிறப்பு பூஜை நடத்த வேண்டும், அந்த பூஜை நடத்தினால் நல்ல புகழ் பெறலாம் என கூறியுள்ளார்.

ஆடையில்லாமல் பூஜை

அந்த பெண் கனடா சென்ற நிலையில், ஆடையில்லாமல் பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் வீடியோ அழைப்பில் ஆடையில்லாமல் தோன்ற அதனை வீடியோ பதிவு செய்துள்ளார் ஜோதிடர். மேலும், இந்த பரிகார பூஜைக்காக ஜோதிடர் ரூ.70,000 கட்டணம் பெற்றுள்ளார்.

அந்த பெண் தொலைக்காட்சி நிறுவன அழைப்பின் பேரில் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். இதனை ஜோதிடரிடம் தெரிவித்த போது. மீண்டும் பூஜை செய்ய வேண்டுமென ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். 

ஆனால் அந்த பெண் பணம் தர மறுக்கவே உன்னுடைய ஆடையில்லாத வீடியோக்கள் என்னிடம் உள்ளது அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஜோதிடர் இசக்கி முத்துவை கைது செய்துள்ளனர்.  

Leave a comment

Comment