வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாது ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
சந்தேக நபர் அப்பெண்ணை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வீட்டிலிருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி எடுத்து இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவிசாவளைப் பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


