TamilsGuide

வெற்றிப் படங்களைக் கொடுத்த மாபெரும் இயக்குநர் ப. நீலகண்டன் 

இன்று (செப்டம்பர் 3) தமிழ் திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநராக விளங்கி, பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் படங்களைக் கொடுத்த மாபெரும் இயக்குநர் ப. நீலகண்டன் அவர்களின் நினைவு தினமாகும்.

நாடகத் துறையில் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இவர், 1947-இல் ஏவி.எம் நிறுவனத்தின் 'நாம் இருவர்' திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி சினிமாவுக்குள் தடம் பதித்தார். 1951-இல் அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு' படத்திற்கு உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின், சிவாஜி கணேசன் நடித்த 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி', 'முதல் தேதி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி கவனத்தைப் பெற்றார். கலைஞர் கருணாநிதியின் காவியப் படைப்பான 'பூம்புகார்' திரைப்படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், 1957-இல் 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் இணைந்த இவர்களது கூட்டணி, தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத வெற்றிக் கூட்டணியாக மாறியது. இயக்குநர் பீம்சிங் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைந்தது போல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ப. நீலகண்டன் அமைந்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகபட்சமாக 18 திரைப்படங்களை இயக்கிய மற்றும் உதயவாக இருந்த ஒரே இயக்குநர் என்ற சாதனை இவரையே சாரும்.

திருடாதே, நல்லவன் வாழ்வான், கொடுத்து வைத்தவள், காவல்காரன், கண்ணன் என் காதலன், கணவன், மாட்டுக்கார வேலன், என் அண்ணன், குமரிக்கோட்டம், ஒரு தாய் மக்கள், நீரும் நெருப்பும், ராமன் தேடிய சீதை, சங்கே முழங்கு, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் மற்றும் நீதிக்கு தலைவணங்கு ஆகியவை இவர் இயக்கிய குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். மேலும் 'உலகம் சுற்றும் வாலிபன்' மற்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்பட உருவாக்கத்திலும் இவரது முக்கிய பங்களிப்பு இருந்தது.

திரைப்பட இயக்கத்தோடு நின்றுவிடாமல், உலகத் திரைப்படங்களின் கதை கட்டமைப்பு மற்றும் திரைக்கதை இலக்கணங்கள் குறித்து பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் எழுதியுள்ளார். 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று மறைந்த இயக்குநர் ப. நீலகண்டன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சாதனைகளை அவரது நினைவு நாளில் சினிமா உலகம் சார்பாக போற்றி வணங்குவோம்.

#pneelakandan

Leave a comment

Comment