அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போரைக் விமர்சித்த சர்வதேச மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடுகடத்த முயன்றமை தொடர்பான வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாவட்ட நீதிபதி நோயல் வைஸ் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
90 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் என்பது மக்களுக்குச் சொந்தமானது என்றும், அதனைப் பறிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து வெளிப்படையாகப் பேசுவது, நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரும், மாணவர் அமைப்புகளின் முக்கியப் பேச்சாளருமான மஹ்மூத் கலீல் 2025 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை நாடுகடத்துவதற்கு எதிராகத் தனியான வழக்கில் போராடி வரும் மஹ்மூத் கலீல், தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.


