TamilsGuide

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 'அபோட்ஸ்போர்ட்-மிஷன்' தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முன்னாள் மேயருமான பாம் அலெக்சிஸ் போட்டியிடுகிறார்.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கெர்ரி-லின் ஃபின்ட்லே சட்டமன்றத்தில் உறுப்பினராவதற்காக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஃபின்ட்லே போட்டியிடுவதற்கு வழிவிடும் வகையில், அத்தொகுதியின் கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த மே மாதம் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபின்ட்லேவின் தலைமையின் கீழ் கட்சியில் கடும் குழப்ப நிலை நிலவி வருகிறது.

இந்த மாதத்தில் மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக மாறியுள்ளனர்.

அத்துடன் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் போன்ற முக்கிய அதிகாரிகளும் விலகியுள்ளனர். கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பீட்டர் மிலோபார் மற்றும் ஐயன் பேட்டன் ஆகியோர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

எனினும், இடைத்தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் தங்களால் வேட்பாளரை நிறுத்த முடியாது என மிலோபார் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும், முன்கூட்டிய வாக்களிப்பு செப்டம்பர் 18 முதல் 23 வரை நடைபெறும் எனவும் 'எலக்சன்ஸ் பி.சி' அறிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment