கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சர்ரே பொலிஸ் அதிகாரி தாவூட் அலாஎல்டின் சுகாரிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய உயர் நீதிமன்ற நீதிபதி முர்ரே பி. பிளாக், அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து முன்வைத்த பரிந்துரையை ஏற்று இத்தீர்ப்பை வழங்கினார்.
2020 ஆம் ஆண்டில் சுர்ரி பொலிஸ் பிரிவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றிய சுகாரி, குற்றவாளிகளுக்காக போதைப்பொருள் வாங்குவதில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
மேலும், கண்காணிப்பின்றி பணியாற்றத் தொடங்கும் போது பொலிஸ் தரவுத்தளங்களை குற்றவாளிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரைப் பொறிவைத்துச் பிடிக்க பொலிஸ் சிறப்பு ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. போலி போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரி போன்று நடித்த மற்றொரு அதிகாரி ஆகியோரைக் கொண்டு 59 போலி சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன.
போலி போதைப்பொருள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட 72,000 டொலர்களில், சுகாரி பேரம் பேசி 63,000 டொலருக்குப் பொருட்களை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் 8,000 டொலர்களைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்ட போது கைது செய்யப்பட்டார்.
சுகாரியின் கைப்பேசியைச் சோதனையிட்டதில், பொலிஸ் தரவுத்தளத்தில் இருந்த ரகசியத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் புகைப்படமெடுத்து குற்றவாளிகளுக்கு அவர் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைத்தது உறுதி செய்யப்பட்டது.
குற்றத்தை ஒப்புக்கொண்டமை, வாலிப வயது மற்றும் முன்னர் குற்றப் பின்னணி இல்லாதமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை, மரபணு மாதிரி வழங்குதல் மற்றும் 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீதான ஏனைய 12 குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பினால் கைவிடப்பட்டன.


