TamilsGuide

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது - 18 படகுகள் பறிமுதல்

நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 33 நபர்களைக் கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதக் காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட கடல் எல்லைகளில் இந்த அதிரடிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்காந்தை, லங்காபட்டுண, பிளாக் பொயிண்ட், அரிசிமலை, நிலாவெளி, கல்குடா, கொக்குத்தொடுவாய், துக்குப்பாடு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வெத்தலைக்கேணி உள்ளிட்ட கரையோர மற்றும் கடல் பிராந்தியங்களை உள்ளடக்கி இத்தேடுதல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

இச்சோதனைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 18 சிறிய படகுகளும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குச்சவெளி, கோட்பே, மூதூர், முல்லைத்தீவு, கொக்கிலாய், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a comment

Comment