செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோதகர்கள் மீது வாகனத்தால் மோத நபர் ஒருவர் முயன்றதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
அதன் போது ஆலய சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன் போது , புலம்பெயர் தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையத்தில் , காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகள் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டுள்ளன.
அவற்றை கைப்பற்றி அழிக்க முற்பட்ட சுகாதார பரிசோதகர்களை கடுமையான வார்த்தை பிரயோகங்களால் பேசி , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவர்கள் மீது வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சுகாதர பரிசோதகர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


