• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஹாரமாதேவியாக மாற்றப்பட்ட விக்டோரியா

இலங்கை

இன்று விஹாரமகாதேவி பூங்கா என்று அழைக்கப்படும் கொழும்பின் புகழ் பெற்ற பூங்கா, ஒரு காலத்தில் "விக்டோரியா பூங்கா (Victoria Park)" என்ற பெயரால் அறியப்பட்டது.

1958 ஆம் ஆண்டு ஜூலை 18 , பூங்காவில் விஹாரமகாதேவி அரசியின் சிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் இதற்கு "விஹாரமகாதேவி பூங்கா" எனப் பெயரிடப்பட்டது. 

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர்டட்லி சேனநாயக்க, கலாசார அமைச்சர் ஜயவீர குருப்பு, வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பெயர் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்றும் சிலர் அன்போடு இதை "விக்டோரியா பார்க்" என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்தப் பூங்கா, பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் உருவாக்கப்பட்ட விக்டோரியன் பாணி நகரப் பூங்காக்களின் அழகிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

நூற்றாண்டுகள் பழைமையான ஆல மரங்கள், விசாலமான பசுமைப் புல்வெளிகள், நடைபாதைகள் மற்றும் ஓய்வெடுக்க ஏற்ற அமைதியான சூழல் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

பலருக்குத் தெரியாத ஒரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால், ஒரு காலத்தில் இந்தப் பூங்காவுக்குள் குறுகிய பாதையில் (Narrow Gauge) இயங்கிய சிறிய தொடரூந்து சேவையும் இருந்தது. 

குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் மிகவும் பிடித்திருந்த அந்தத் தொடரூந்து, பின்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. அதனை இயக்கிய டீசல் இயந்திரம் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரிலுள்ள ஹன்ஸ்லெட் (Hunslet) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று அந்தத் தொடரூந்து ஓடாவிட்டாலும், அதன் பழைய நிலையம் கடந்த காலத்தின் இனிய நினைவுகளையும் கொழும்பின் பாரம்பரியத்தையும் அமைதியாக நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தப் புகைப்படம் ஒரு பூங்காவை மட்டுமல்ல; கொழும்பின் நகர வளர்ச்சி, காலனித்துவ பாரம்பரியம் மற்றும் இலங்கையின் கலாசார மாற்றங்களைப் பதிவு செய்திருக்கும் ஒரு அரிய வரலாற்றுச் சான்றாகும்.

#SriLankaNews

Leave a Reply