• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணி புதைகுழி  மனித எச்சங்கள் மீட்பு – முக்கிய தடயவியல் அறிக்கைகளை சமர்ப்பிக்க யாழ் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை

யாழ்ப்பாணம் செம்மணி கூட்டுப் புதைகுழியில் மேலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அங்கிருந்து இதுவரை கண்டறியப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இதுவரை 98 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின் குமார் தலைமையில் அகழாய்வு தளத்திலேயே நடைபெற்ற திறந்த நீதிமன்ற அமர்வில், நிலத்தட ஊடுருவும் ரேடார் (Ground Penetrating Radar) ஆய்வின் முழுமையான அறிக்கையும், புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே மனித எச்சங்களின் காலக்கணிப்பு (dating) உள்ளிட்ட மேலதிக தடயவியல் பரிசோதனைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நீதிமன்றம் அனுமதித்துள்ள அகழாய்வு காலத்தை நீட்டிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்மணி புதைகுழி தற்போது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய கூட்டுப் புதைகுழியாக பதிவாகியுள்ள நிலையில், உண்மையை வெளிக்கொணர சுயாதீன மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. 
 

Leave a Reply