• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படங்கள், பாலியல் ரீதியாக வெளிப்படையான உள்ளடக்கங்கள் பணத்திற்காக வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறிப்பாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் வழியாக இத்தகைய இணையவழி மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகப் பயனர்களிடையே ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல கட்டுரைகள் மற்றும் காணொளிகள் பகிரப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த விடயம் இலங்கை காவல்துறையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைசுகாதாரம்

மேலும், சம்பந்தப்பட்ட சமூக ஊடகக் குழுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், போலி கணக்குகள் மூலம் நெருங்கிய உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு பரப்புவதற்கான முயற்சிகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இத்தகைய குழுக்களில் பல வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் நபர்கள் குறித்து பெற்றோர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகியிருப்பது அல்லது அதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி எண்கள் மூலம் உள-சமூக ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply