TamilsGuide

160 பேர் பலி.. 133 இந்தியர்கள் மாயம் - நேபாள வெள்ள பாதிப்பின் வீடியோ

திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், போதே கோஷி ஆற்றில் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 133 இந்தியர்கள் உட்பட சுமார் 400 பேர் மாயமாகியுள்ளனர்.

மோடி உறுதி

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும், நாடு முழுவதும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி, நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் மனிதநேய உதவிகளையும் வழங்க இந்தியா தயார் என உறுதி அளித்துள்ளார்.

நேபாளத்தில் பெருகிவரும் வெள்ளத்தால், அதை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் C 130J விமானம் முதற்கட்டமாக மொத்தம் சுமார் 10 டன் எடையுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் நேற்று நள்ளிரவு நேபாளம் புற்பட்டுச் சென்றது.

இந்த பொருட்களில் தற்காலிகக் கூடாரங்கள், கம்பளிகள், தூய்மைப் பொருட்கள், சோலார் விளக்குகள் மற்றும் உயிர்காக்கும் முதலுதவி மருந்துகள் அடங்கும்.

காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே நேபாள வெள்ளத்தின் வீடியோக்கள், சாட்டிலைட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 

Leave a comment

Comment