இசைக்கல்லூரி முதல்வர் நடிகை பானுமதி
சினிமா
#எம்ஜிஆர் நாடோடிமன்னன் திரைப்படத்தை தயாரித்த போது நடிகை பானுமதிக்கும், எம்ஜிஆருக்கும் பிரச்சினை உருவானது. நீங்கள் இயக்குவதாக இருந்தால் நான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முகத்திற்கு நேராக கூறி வெளியேறினார் பானுமதி.
#பின்னாளில் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதல்வரான போது, பானுமதியை இசைக் கல்லூரியின் முதல்வராக நியமித்து அழகு பார்த்தார். இதை எதிர்பார்க்காத பானுமதி எம்ஜிஆரிடம் நன்றி பெருக்கால் நெகிழ்ந்து போனார்.
#ஜெண்டாவின் கைதி’ என்ற ஆங்கிலப் படத்தை தழுவி பானுமதி திரைப்படம் எடுப்பதாக இருந்தார். எம்ஜிஆரும் அந்த நாவலில் வரும் சில சம்பவங்களை மட்டும் வைத்து நாடோடிமன்னன் தயாரிப்பதாக இருந்தார்.
#நடந்தவற்றை எம்ஜிஆரே சொல்கிறார்....
#சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி. பானுமதி அவர்களும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது நாடோடி மன்னன் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு, பரணி பிக்சர்ஸாரின் விளம்பரமும் வந்தது.
அன்று, படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. திருமதி பானுமதி அவர்கள் சொன்னார்கள் –
பானுமதி : ‘நாங்கள் எடுக்கும் கதையையே (‘ஜெண்டாவின் கைதி’ என்ற ஆங்கிலக் கதையின் தழுவல்) நீங்களும் எடுக்கப்போகிறீர்களாமே...!
எம்ஜிஆர் :நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன’ .
‘நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி, அதற்காக இக்கதையை தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்டர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று.
இது பற்றி மேலும் பேச்சு நடந்தது. முடிவாகச் சொன்னேன் -
‘நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள ‘மன்னனாக மாற்றப்படும் காட்சி’யை மட்டும் வைத்துக்கொள்ளப்போகிறேன். மற்றவை எல்லாமே வேறாக இருக்கும். உங்களுக்கும் கதையை மாற்ற முடியாது இருக்குமானால், நீங்களும் எடுங்கள். நமக்குள் போட்டா போட்டியே வராது. உங்கள் கதை ‘ஜெண்டாவின் கைதி'யின் நேர்ப்பதிப்பு. எனது கதை வேறு’ என்று சொன்னேன்.
‘உண்மையில் எனக்கும் குழப்பம்; அவர்களுக்கும் அதே நிலை.
சில நாள்களுக்குப் பிறகு பானுமதி சொன்னார்கள் - ‘நாங்கள் அந்தக் கதையை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகம் இல்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்’ என்று. நன்றி தெரிவித்தேன், உண்மையான உள்ளத்துடன்.
ஜெயராமன். ரெ






















