TamilsGuide

தந்தை ஆகப்போகும் உலகப் புகழ்பெற்ற கிங் பென்குயின் - 17 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசயம்

உலகிலேயே மிக உயர்ந்த ராணுவப் பதவியைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த ‘சர் நில்ஸ் ஒலாவ் III’ என்ற கிங் பென்குயின் விரைவில் தந்தையாகப் போகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ உயிரியல் பூங்காவில் அதன் புதிய இணையான 'கானி' என்ற பெண் பென்குயின் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடின்பரோ உயிரியல் பூங்காவில் கடந்த 17 ஆண்டுகளில் கிங் பென்குயின் இனம் முட்டையிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த முட்டை இடப்பட்டது.

பூங்காவிற்கு கடந்த ஜனவரி மாதம் தான் 'கானி' உட்பட மூன்று பெண் பென்குயின்கள் கொண்டு வரப்பட்டன. அவை புதிய சூழலுக்குப் பழகி, இனப்பெருக்கம் செய்ய குறைந்தது 2027 ஆம் ஆண்டு வரை ஆகும் என பூங்கா பராமரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக மிக விரைவிலேயே இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.

யார் இந்த 'மேஜர் ஜெனரல் சர் நில்ஸ் ஒலாவ்'?

சர் நில்ஸ் ஒலாவ் ஒரு சாதாரண பென்குயின் அல்ல. நார்வே நாட்டின் அரச பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ சின்னமாகவும், அதன் தலைமைத் தளபதியாகவும் இது விளங்குகிறது.

1972 ஆம் ஆண்டு முதல் இந்த ராணுவப் பதவி முறையே மூன்று கிங் பென்குயின்களுக்கு 'நில்ஸ் ஒலாவ்' என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2016 இல் 'பிரிகேடியர்' அந்தஸ்தைப் பெற்ற இது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று நார்வே ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் ‘மேஜர் ஜெனரல்’ ஆகப் பதவி உயர்வு பெற்றது.

உலகிலேயே மிக உயர்ந்த ராணுவப் பதவியில் இருக்கும் பென்குயின் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இது இடம் பிடித்துள்ளது.

காதலை வென்ற ராணுவ கம்பீரம்!

இதுகுறித்து பூங்காவின் விலங்குகள் பராமரிப்புத் துறைத் தலைவர் டேரன் மெக்காரி கூறுகையில், 'புதிதாக வந்த பெண் பென்குயின்கள் இங்குள்ள சூழலோடு செட்டிலாக காலம் எடுக்கும் என்று நினைத்தோம்.

ஆனால், சர் நில்ஸ் தனது ராணுவ கம்பீரத்தோடு மிகக் குறைந்த நாட்களிலேயே கானியின் மனதை வென்றுவிட்டது. கானிக்கு இவருடைய மிலிட்டரி ஸ்டேட்டஸ் மிகவும் பிடித்துவிட்டது போல' என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.

பென்குயின்களின் முட்டை பராமரிப்பு

கிங் பென்குயின்கள் பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடும். இந்த முட்டை பொரிந்து வெளிவர சுமார் 55 நாட்கள் ஆகும். மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த பென்குயின்கள் சாதாரண பறவைகளைப் போல கூடுகள் கட்டுவதில்லை.

மாறாக, பெற்றோர் பென்குயின்கள் இருவரும் தங்களது கால்களின் மேல் முட்டையை வைத்து, மாறி மாறித் தங்களது உடல் சூட்டின் மூலம் அதனைப் பாதுகாக்கும். தற்போது கானியும் சர் நில்ஸும் பூங்காவின் அமைதியான ஒரு மூலையில் அமர்ந்து தங்களது முட்டையை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றன.

தற்போது ராணுவப் பதவிகள் மற்றும் கௌரவங்களை வென்ற சர் நில்ஸ் ஒலாவ், தனது வாழ்நாளின் மிக முக்கியமான கடமையான 'தந்தை' என்ற புதிய பொறுப்பை ஏற்கத் தயாராகி வருகிறது.

Leave a comment

Comment