TamilsGuide

பிரெஞ்சு பொலிஸார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல் - சம்பவத்தால் பரபரப்பு

பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முயன்ற பிரெஞ்சு காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலோரக் காவல் படையினர் படகை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த புலம்பெயர்ந்தோர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகப் பிரிட்டனை அடைய கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கானோர் தினமும் பிரெஞ்சு கடற்கரைகளில் திரள்கின்றனர்.

பாதுகாப்புப் படையினர் படகுகளைக் பறிமுதல் செய்யவோ அல்லது கடலுக்குள் செல்வதைத் தடுக்கவோ முயலும் போது, அவர்கள் மீது கற்களை வீசியும், தடி மற்றும் கூர்மையானப் பொருட்களைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாகப் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் இணைந்து எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.

போலீசார் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ள போதிலும், மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆக்ரோஷமான முறையில் சட்ட அமலாக்கப் படையினரை எதிர்கொண்டு படகுகளை இயக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.

ஆபத்தான இந்த கடல்சார் பயணங்களின் போது ஏற்படும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் உயிரழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரைக் குவிக்கவும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

Leave a comment

Comment