TamilsGuide

மத்திய கிழக்கு பதற்றம் - சர்வதேச சரக்கு போக்குவரத்தில் இலங்கைக்கு புதிய வாய்ப்பு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக மதிப்புள்ள சரக்குகளைக் கையாள்வதற்கான ஒரு மாற்றுப் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுத்து வருகிறது. இலங்கைபொருட்கள்

அண்மையில் 14 லம்போர்கினி (Lamborghini) வாகனங்கள் அடங்கிய சரக்கு ஒன்று இந்நாட்டின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டதே இதற்குச் சான்றாகும்.

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அந்த 14 சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. 

அங்கிருந்து அவை 40 அடி நீளமுள்ள ஏழு கொள்கலன்களில் (containers) ஏற்றப்பட்டு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

அங்கிருந்து துபாய் மற்றும் கட்டாரின் தோஹா ஆகிய இடங்களுக்கு மேலும் கொண்டு செல்வதற்காக அவை ஒரு பெரிய சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக‍ தெரிவிக்கப்படுகிறது.

சரக்கு போக்குவரத்தைக் கையாளும் டேனிஷ் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரின் கூற்றுப்படி, பிராந்திய உறுதியற்ற தன்மையால் பாரம்பரியப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழ்நிலையில், இந்த புதிய பாதை ஒரு மாற்றுப் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கைக்குப் பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடும் என்றார்.

இந்தக் கப்பல் சரக்கில், சுமார் 100 மில்லியன் ரூபாய் விலையுள்ள சில ஸ்போர்ட்ஸ் கார்கள் முதல் 500 மில்லியன் ரூபாய் வரையிலான மிக விலையுயர்ந்த மொடல்கள் வரை பல்வேறு வாகனங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வாகனங்கள் சில நாட்களுக்கு முன்பே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.

அதேவேளையில், சரக்கை ஏற்றிச் செல்லும் விமானம் ஆகஸ்ட் 21 அன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துபாய் மற்றும் தோஹாவிற்குப் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இலங்கையின் சரக்குக் கையாளுகை மற்றும் விநியோகத் துறைக்குஒரு முக்கிய மைல்கல்லாக அமையக்கூடியதாக முன்வைக்கப்பட்ட அந்த நிகழ்வுடன், வழக்கத்திற்கு மாறான ஊடகக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது.

சரக்கு நடவடிக்கையை செய்தி சேகரிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற பத்திரிகையாளர்கள், விமான நிலைய அதிகாரிகள் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

சரக்கு கிராமத்தின் ஏற்றுமதிப் பிரிவில் பணிபுரியும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், அந்த நடவடிக்கையை ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுத்ததோடு, பத்திரிகையாளர்களை அப்பகுதியை விட்டு வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுப் போக்குவரத்து மற்றும் விநியோக மையமாக இலங்கை உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தக்கூடிய ஒரு சர்வதேச சரக்குக் கையாளுதல் நடவடிக்கையைப் பற்றிச் செய்திகளை வெளியிடுவதிலிருந்து ஊடகவியலாளர்கள் ஏன் தடுக்கப்பட்டனர் என்பது குறித்து இந்தச் சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இலங்கைபொருட்கள்

செய்தியாளர்களுக்குச் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நடவடிக்கையின் போது அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் வாகனங்களைப் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தது சர்ச்சையை மேலும் அதிகரித்தது.

எவ்வாறெனினும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் வணிக நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த சரக்கு வந்துள்ளது.

இது அதிக மதிப்புள்ள சர்வதேச சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.
 

Leave a comment

Comment