அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பயணம் செய்வோரின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் விதிகளின்படி, குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெறும் நோக்கில் அமெரிக்காவுக்குச் சென்று குழந்தை பெற்றுக்கொள்வது “பிறப்புச் சுற்றுலா” (Birth Tourism) எனக் கருதப்படுகிறது.
இது சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்குச் செல்வதற்கான அனுமதிக்கப்பட்ட நோக்கம் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா அதிகாரிகள், விண்ணப்பதாரர் அமெரிக்காவுக்குச் செல்வதன் பிரதான நோக்கம் குழந்தை பெற்றுக்கொண்டு அதன்மூலம் குடியுரிமை பெற்றுக்கொடுப்பதாக இருப்பதாக நம்புவதற்குக் காரணம் இருந்தால், B வகை விசா விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என அமெரிக்க விசா விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கை, B வகை குடியேற்றமற்ற விசாக்களை நிர்வகிக்கும் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு, 2020 ஜனவரியில் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
மேலும், அமெரிக்க விசா வழங்கப்பட்டிருப்பது மட்டும் நாட்டுக்குள் நுழைவதற்கான உத்தரவாதம் அல்ல என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு நுழைவதற்கான அனுமதி என்பது இறுதியில் நுழைவுப் புள்ளியில் உள்ள அமெரிக்கச் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட சுற்றுலா அல்லது தற்காலிகப் பயண நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக வருகை விசாக்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.


