கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில டிரெய்லர் இன்று வெளியாகிறது. உலகளவில் உள்ள பல்வேறு நேரங்களை கணக்கில் கொண்டு, இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு இத்திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.
இக்கதைக்களத்தில் 'ரயா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷ், அதிகாரம், குற்றம் மற்றும் வன்முறை நிறைந்த சூழலில் சந்திக்கும் சவால்களே படத்தின் முக்கிய கதைக்கருவாகும். மேலும், இப்படத்தில் யாஷ் 'ரயா' மற்றும் 'டிக்கெட்' என இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 26 அன்று உலகமெங்கும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இன்று வெளியாகும் ஆங்கில டிரெய்லர் படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.


