TamilsGuide

47 வயதில் முதல் புல்-அப்ஸ் செய்து அசத்திய நடிகை ஜோதிகா

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் கடினமான 'புல்-அப்ஸ்' உடற்பயிற்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்து புதிய பிட்னஸ் மைல்கல்லை எட்டியுள்ளார்.

இது தொடர்பான அவரது உத்வேகமூட்டும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தீவிர உடல் வலிமைப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ஜோதிகா, இந்த வயதில் 'புல்-அப்ஸ்' செய்தது தனக்கு "அற்புதமான" உணர்வைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"என்னுடைய பிட்னஸ் பயணத்தில் எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த அறிவுரை எனது பயிற்சியாளர் மகேஷ் கனேகர் கொடுத்ததுதான். உடற்பயிற்சி என்பது வெளிப்புறத் தோற்றத்திற்கானதல்ல; அது உடலின் உள் வலிமைக்கானது. வலிமை கூடும்போது உடல் எடை தானாகவே குறைந்துவிடும்.

எனது 44 வயதில்தான் இந்த உடற்பயிற்சி பயணத்தை அவரோடு தொடங்கினேன். இன்று எனது 47 வயதில், முதல்முறையாக இரண்டு 'புல்-அப்ஸ்' பயிற்சிகளைச் செய்துள்ளேன். வயது என்பது வெறும் எண் மட்டுமே; நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர் எனக்கு நிரூபித்துள்ளார்" என்று ஜோதிகா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தற்போது வெளியாகி இருக்கும் 'சிஸ்டம்' வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஜோதிகா, தனது தினசரி உடற்பயிற்சி முறைகளையும் பகிர்ந்துள்ளார்:

அதில், 'சிஸ்டம்' திரைப்பட நடிகை, தான் ஒரு "காலை நேரப் பிரியர்" என்றும், வாரத்திற்கு 4-5 முறை உடற்பயிற்சி செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார். " நான் எழுந்ததும், ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு, ஜிம்மிற்கு விரைந்து செல்வேன். அங்கு பளுதூக்கும் உடல் வலிமைப் பயிற்சி செய்வேன்.

அது காலை 10.30 மணிக்குள் முடிந்துவிடும், அதன்பிறகு அன்றைய நாளுக்கு தயாராகிவிடுவேன். இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்வேன், பிறகு ஒரு நாள் ஓய்வெடுப்பேன். வாரத்திற்கு 4 முதல் 5 நாட்கள் வரை உடற்பயிற்சியை மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

40 வயதைக் கடந்த பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் வயது ஒரு தடையல்ல என்பதைத் தனது கடின உழைப்பின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் நடிகை ஜோதிகா.
 

Leave a comment

Comment