TamilsGuide

2028க்குப் பின்னர் இலங்கைக்கு மூன்றாவது பொருளாதாரப் போர் – ரணில் எச்சரிக்கை

2028 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். 

கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடன் மீளச் செலுத்துதல் மீண்டும் ஆரம்பிக்கும்போது, இலங்கையின் அடுத்த முக்கிய பொருளாதார சவால் உருவாகும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 2028 ஆம் ஆண்டுக்குள் கையிருப்பை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், அதற்குத் தேவையான மேலதிக 7 பில்லியன் டொலர்களை இலங்கை எவ்வாறு திரட்டப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குத் தேவையான மேலதிக அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கான தெளிவான திட்டம் தற்போது நாட்டிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி, எதிர்கால கடன் மீளச் செலுத்தலுக்குத் தயாராகத் தவறினால், இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கக்கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கடன் மீளச் செலுத்துவதில் நிவாரணம் கிடைத்துள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாக அதனை கருத முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைசுற்றுலா

“முதல் சுற்றை முடித்துவிட்டோம். இப்போது இரண்டாவது சுற்று ஆரம்பிக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, எதிர்கால கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான போதிய அந்நியச் செலாவணியை இலங்கை எவ்வாறு ஈட்டப் போகிறது என்பதே முக்கிய கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் 2027 மார்ச் மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குப் பின்னரான அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கி சட்டம், பொது நிதி முகாமைத்துவ சட்டம், பொது கடன் முகாமைத்துவ சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அவை பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்குமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் பொருளாதார மாற்றத் திட்டத்தைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக மாற்றுத் திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் நூலில் குறிப்பிடப்படும் இரண்டு பொருளாதாரப் போர்களைத் தொடர்ந்து, 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவாலை இலங்கையின் “மூன்றாவது போர்” என அவர் வர்ணித்துள்ளார்.

“அந்தப் போரில் வெற்றிபெற முடியாவிட்டால், நாம் மிகப் பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்வோம்,” எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.


 

Leave a comment

Comment