விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, உலகின் மிகப்பெரிய பேட்டரி மூலம் இயங்கும் ‘X1’ எலக்ட்ரிக் விமானம் தனது முதலாவது சோதனையோட்டப் பறப்பை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிளாட்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 27 நிமிடப் பறப்பிற்கு, வெறும் $5 டாலர்கள் மட்டுமே மின்சாரக் கட்டணமாகச் செலவாகியுள்ளது விமானப் போக்குவரத்துத் துறையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்வீடனில் தொடங்கப்பட்டு அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் Heart Aerospace நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ‘X1’ சோதனை விமானம், சுமார் 11 டன்னுக்குக் (11,340 கிலோ) அதிகமான எடையுடன் 32 மீட்டர் இறக்கையளவைக் கொண்டுள்ளது.
நான்கு சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயக்கப்பட்ட இந்த விமானம், தரைவழி இயக்கம் (Taxiing), டேக் ஆஃப் மற்றும் தரையிறக்கம் உட்பட 27 நிமிடங்கள் வான்வெளியில் பறந்து 1,100 அடி உயரத்தை எட்டிச் சாதனை படைத்தது.
எரிபொருள் விலையும் விமானக் கட்டணங்களும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் தற்போதைய சூழலில், $5 டாலர் மட்டுமே மின்சாரச் செலவானது மிகச்சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 30 பயணிகள் பயணிக்கக்கூடிய ‘ES-30’ என்ற கமர்ஷியல் ஹைபிரிட்-எலக்ட்ரிக் விமானத்தைத் தயாரிப்பதே ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மை இலக்காகும்.
இந்த ‘ES-30’ விமானம் முழு எலக்ட்ரிக் முறையில் 200 கிலோமீட்டர் தூரமும், ஹைபிரிட் முறையில் 800 கிலோமீட்டர் தூரமும் பறக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சோதனைப் பறப்பில் பயன்படுத்தப்பட்ட $5 டாலர் கட்டணம் என்பது வெறும் மின்சாரப் பயன்பாட்டிற்கானது மட்டுமே என்றும், விமானப் பராமரிப்பு, விமானிகள் சம்பளம் மற்றும் விமான நிலையக் கட்டணங்கள் இதில் அடங்காது என்றும் கூறப்பட்டாலும், வழக்கமான ஜெட் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் இது இயக்கச் செலவை (Operating Costs) 40 சதவீதத்திற்கும் மேல் குறைக்கும்.
2031-ஆம் ஆண்டிற்குள் பயணிகள் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள இந்த எலக்ட்ரிக் விமானங்கள், எதிர்காலப் பசுமை விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


