TamilsGuide

கனடாவில் பயிர்களைத் தாக்கும் பூஞ்சை நோய்கள்

கனடாவில், தீவிரப் பயிர் நோய்களால் கேனோலா, டூரம் கோதுமை, வசந்தகாலக் கோதுமை மற்றும் பருப்பு வகைப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தசாப்தத்தின் முதல் அதிக மழைப் பொழிவு கொண்ட ஆண்டாக இது அமைந்துள்ள நிலையில் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. நோய்த் தாக்கத்திலிருந்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் பெரும் தொகையைச் செலவிட்டு பூஞ்சைக் கொல்லிகளை தெளித்து வருகின்றனர்.

வசந்த காலத்தின் இறுதியிலும் கோடையின் தொடக்கத்திலும் பெய்த அதிக மழையால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து நிலவிய அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலை, பூஞ்சை நோய்கள் வேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியது.

உரம் உள்ளிட்ட பொருட்களின் அதிக விலை காரணமாக நடப்பு ஆண்டில் விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், பயிர்களைக் காப்பாற்ற பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சாஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏக்கருக்கு $6 முதல் $20 வரை கூடுதல் தொகையை பூஞ்சைக் கொல்லிகளுக்காகச் செலவிட்டுள்ளனர்.

அதிகளவில் கடன் வாங்கி பூஞ்சைக் கொல்லிகளைத் தெளித்துள்ள போதிலும், அறுவடை முழுமையாக நிறைவடைந்த பிறகே விளைச்சலின் தரம் மற்றும் அளவைச் துல்லியமாகக் கணிக்க முடியும் எனப் பயிர் ஆலோசகர்களும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

கனடா உலக அளவில் கேனோலா, டூரம் கோதுமை மற்றும் உலர் பட்டாணி ஆகியவற்றின் முன்னணி ஏற்றுமதியாளராகத் திகழ்வதால், இந்நோய் தாக்கம் உலகளாவிய பயிர் ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. 
 

Leave a comment

Comment