அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
எனினும், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மீண்டும் ராணுவ மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது.
ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு 60 நாட்களுக்குள் இறுதித் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
இந்த காலக்கெடு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், ஈரான் போரைத் தொடராமல் உடனடியாக வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய வேண்டும் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில், எந்த வடிவத்திலும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமனும் ஈரானும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்நாட்டின் மீதும் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்துக்குத் திரும்பும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதுவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ஈரானின் கொள்கை தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாறும் என அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் நிர்ணயித்துள்ள காலக்கெடு தொடர்பான விவரங்கள் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


