ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கிரீன்,
"வெளிநாட்டுப் போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாது என்று டிரம்ப் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கான எல்லையை டிரம்ப் நிர்வாகம் குறைத்து வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் அளவு விளிம்பிற்கு இன்னும் வரவில்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இஸ்ரேலின் எச்சரிக்கைகளை கேட்டு மட்டுமே அவர்கள் நடக்கின்றனர்.
ஈரான் மீது அணுஆயுதத்தைப் பயன்படுத்தினால் அது மிகப்பெரிய உலகப்போராக மாறி, லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும். கடுமையான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளார்.
கிரீனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
ஜூன் 2025இல் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வெளிநாட்டுப் போர்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சார வாக்குறுதிகளை டிரம்ப் கைவிட்டுவிட்டதாக கிரீன் முன்பும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


