TamilsGuide

ஐரோப்பாவில் 55.6 மீட்டரில் மிக உயரமான மாதா சிலை - போலந்து நாட்டில் திறப்பு

போலந்து நாட்டில் உள்ள கொனோடோபி என்ற சிறிய கிராமத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஒரு விழாவில், கன்னி மேரியின் பிரம்மாண்டமான சிலை திறந்து வைக்கப்பட்டது.

போலந்தின் முன்னாள் அதிபரும், கம்யூனிச எதிர்ப்பு சாலிடாரிட்டி கட்சியின் (anti-communist Solidarity party) தலைவருமான லெக் வலேசா கன்னி மேரி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், தனது கத்தோலிக்க நம்பிக்கையுடன் தொடங்கிய ஒரு பயணத்தின் முடிவை இந்த கன்னி மேரி சிலை குறிப்பதாக கூறினார்.

55.6 மீட்டர் உயரம் கொண்ட இந்த நினைவுச் சின்னம், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கன்னி மேரி சிலை என்று நம்பப்படுகிறது.

இதன் திறப்பு விழாவில் கத்தோலிக்கத் திருப்பலி, பாரம்பரிய போலந்து இசை மற்றும் கூட்டத்தின் மீது சிவப்பு ரோஜா இதழ்களை தூவிய ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம்பெற்றன.

போலந்து நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தம்பதிகளான ரோமன் மற்றும் கிராஸினா கார்கோசிக் ஆகியோர் கன்னி மேரிக்கு இந்த நினைவுச்சின்னத்தை அமைக்க உதவினர்.

மேலும் அவர்கள், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இது கட்டப்பட்டதாக தெரிவித்தனர். இந்த சிலை குறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், ஒரு புனித யாத்திரைத் தலமாகவும், சுற்றுலா ஈர்ப்பு மையமாகவும் இந்த சின்னம் மாறும் என தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment