இரண்டு உலகப் போர்களைக் கண்டுவிட்ட உலக நாடுகள் தமக்கிடையே நம்பிக்கையைக் கட்டி வளர்க்கவும், சமாதான வழிமுறைகளுக்கு ஊடாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், பொதுவான விடயங்களில் கூட்டாகச் செயற்படவும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல உலகளாவிய அமைப்புகளை உருவாக்கி நடத்தி வருகின்றன. பல பத்தாண்டுகளாக இயங்கிவரும் இத்தகைய அமைப்புகள் உலக நாடுகளின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணாதுவிடினும் பதட்டங்களைக் குறைக்கும் விதத்திலாவது செயற்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. வல்லரசு நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகள் இத்தகைய மன்றங்களைப் பல வேளைகளில் புறந்தள்ளி நடந்து கொள்ளுகின்ற போதிலும் வலிமை குன்றிய நாடுகளுக்கு இன்னமும் நம்பிக்கை அளிப்பதாக அத்தகைய மன்றங்கள் உள்ளதை மறுத்து விடுவதற்கில்லை. இத்தகைய உலக மன்றங்களை வல்லரசு நாடுகள் சில, குறிப்பாக உலகின் காவல்காரனாகத் தன்னைக் கருதிச் செயற்பட்டுவரும் அமெரிக்கா தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டதையும் கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது. தனது வல்லமை செல்லுபடியாகாமல் போகும் ஒரு கட்டத்தில் அத்தகைய உலக மன்றத்தையே கேலி பேசும், அல்லது உதாசீனம் செய்யும் போக்கையும் அவதானிக்க முடிந்தது.
இத்தகைய போக்கிற்கு மிகக் கிட்டிய எடுத்துக்காட்டாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. தனது எதிரி நாடான ரஸ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டின் மீது பிடியாணை பிறப்பித்த போது அதனைக் கண்டு கொள்ளாமல் போன அமெரிக்கா, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குக் காரணமான இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அவர்களைப் போர்க் குற்றவாளி என இந்த நீதிமன்றம் அறிவித்த நாள் முதலாக அந்த நீதிமன்றத்தையே இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதைப் பார்க்க முடிகின்றது.
1998 யூலை 17ஆம் திகதி கொண்டுவரப்பட்ட ரோம் சாசனத்தின் ஒரு முக்கிய அங்கமாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. தற்போது 125 நாடுகள் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ள இந்த ரோம் சாசனத்தின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டு யூலை முதலாம் திகதி இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ரோம் சாசனத்தில் கையொப்பம் இட்ட முதல் நாடாக செனகல் விளங்குகின்றது. இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், ஆக்கிரமிப்பு தொடர்பிலான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்ட இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் செயற்பட்டு வருகின்றது.
மனித குலத்திற்கு அவசியமான ஒரு மன்றமாக இது உள்ள போதிலும் பல உலக நாடுகள் இந்த ரோம் சாசனத்தை ஏற்றுக்கொண்டு அதில் இன்றுவரை கையெழுத்திடாமல் உள்ளன. அமெரிக்கா, சீனா, ரஸ்யா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் இந்தியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்த ரோம் சாசனத்தில் இன்னமும் கையொப்பம் இடவில்லை. ரோம் சாசனத்தில் கையொப்பம் இடாத நாடுகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றின் நியாயாதிக்க எல்லையினுள் அடங்க மாட்டா. ஆனால் இந்த நாட்டின் குடிமக்கள் யாராவது ரோம் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில் குற்றம் புரிந்திருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது. அந்த வகையிலேயே அண்மைக் காலத்தில் ரஸ்ய அதிபர் புட்டின், இஸ்ரேலியப் பிரதமர் நேதன்யாஹு ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களைக் கைது செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு ரோம் சாசனத்தில் கையொப்பம் இட்ட நாடுகளுக்கு உள்ள போதிலும், நடைமுறையில் பல நாடுகள் அந்த உத்தரவைப் புறந்தள்ளி நடப்பதையும் பார்க்க முடிகின்றது.
அதேவேளை, ரோம் சாசனத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருந்த ஒரு சில நாடுகள் அந்தச் சாசனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன. சட்டப்படி ரோம் சாசனத்தில் இருந்து விலகுவதற்கான உரிமை உலக நாடுகளுக்கு உள்ளது. ஆனால், தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துவிட்டு பன்னிரெண்டு மாதங்கள் அவை காத்திருக்க வேண்டும்.
அண்மையில் இவ்வாறு ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள சாட் நாடும், தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவும் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளன. 2027ஆம் ஆண்டு யூலை மாதம் முதல் ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்ள உள்ளதாக விண்ணப்பித்துள்ள சாட், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் சரிசமமாக நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளதுடன், குறித்த நீதிமன்றின் நடவடிக்கைகள் ஆபிரிக்க நாடுகளுக்கு மாத்திரம் எதிரானதாக உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையும் உள்ளது. தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஏழு பேரில் ஆறு பேர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என சாட் குறித்துக் காட்டியுள்ளது.
சமகாலத்தில் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ள தென்னமெரிக்க நாடான வெனிசுவேலா, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஆபிரிக்காவுக்கும், தென்னமெரிக்காவுக்கும் எதிராக பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் மேலும் மூன்று ஆபிரிக்க நாடுகள் ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளன. சாஹெல் பிராந்திய நாடுகள் என அறியப்படும் புர்க்கினா பாசோ, மாலி, நைஜர் ஆகிய நாடுகளும் மற்றொரு சாஹெல் பிராந்திய நாடான சாட் முன்வைத்த குற்றசாட்டுகளையே முன்வைத்து இருந்தன.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து, அந்த அமைப்பையே இல்லாமல் செய்துவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கங்கணம் கட்டிச் செயற்பட்டுவரும் நிலையில் சாட் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் தாமும் ரோம் சாசனத்தில் இருந்து விலகப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளமை அந்த நீதிமன்றின் எதிர்காலம் தொடர்பான சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.
நெதன்யாஹு அவர்களுக்கு எதிரான பிடியாணை தொடர்பில் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படையினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை தொடர்பிலும் சீற்றம் கொண்டுள்ளது. இதனால், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
ரோம் சாசனத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது தொடர்பான தங்கள் நாட்டின் முடிவைப் மீள்பரிசீலனை செய்யுமாறு மூத்த அமெரிக்க அதிகாரிகள் தங்களைத் தொடர்பு கொண்டதாக சாட் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. வெனிசுவேலாவின் அதிபர் நிக்கலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், பதில் தலைவராக உள்ள டெல்சி ரொட்ரிகஸ் அம்மையாரின் முடிவில் அமெரிக்காவின் அழுத்தம் இருக்க வாய்ப்பு உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மை.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக விளங்கிய கரீம் கான், பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டில் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகள் விலகுவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நல்ல செய்தியல்ல.
ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்வதாக முதன்முதலில் அறிவித்த நாடாக புருண்டி உள்ளது. ஆபிரிக்க நாடான புருண்டி 2017ஆம் ஆண்டில் இந்தச் சாசனத்தில் இருந்து வெளியேறியது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றினால் கைதாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மேனாள் சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் தென்னாபிரிக்காவுக்கு 2016ஆம் ஆண்டில் வருகை தந்தபோது அன்றைய அரசாங்கம் அவரைக் கைது செய்யத் தவறியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ரோம் சாசனத்தில் இருந்து வெளியேறப் போவதாக தென்னாபிரிக்கா கூறிய போதிலும், 2017இல் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டது. பிலிப்பைன்ஸ் 2019ஆம் ஆண்டில் வெளியேறியது.
மனித குலத்தைப் பொறுத்தவரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அவசியமான ஒன்றாக உள்ளது. எனினும், அதன் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் சந்தேகங்களையும், விமர்சனங்களையும் தோற்றுவித்து உள்ளதையும் மறுப்பதற்கில்லை. கிட்டிய கடந்த காலத்தில் உலக நாடுகளில் அதிகம் போர்களில் ஈடுபட்ட அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை தனது விசாரணை வளையத்தினுள் கொண்டுவர முடியாத இக்கட்டில் உள்ள நீதிமன்றை வலுவிழக்குகச் செய்யும் வேலைகளில் உலக வல்லரசான அமெரிக்காவே ஈடுபட்டு வரும் நிலையில் அதன் எதிர்காலம் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட பல இனங்களும், தேசங்களும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடக்கையில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றின் பணிகள் முடக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த உலகத்துக்குமே தீங்காக அமையும் என்பதே நிதர்சனமான உண்மை.
சுவிசிலிருந்து சண் தவராஜா


