தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடித்து உயர்ந்தவர் நடிகர் சூரி. இவர் நடிப்பில் வெளியான விடுதலை, கருடந், மாமன் ஆகிய திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், நடிகர் சூரி தொடர்ச்சியான வெற்றிப் படங்களைத் தொடர்ந்துநாயகனாக நடித்துள்ள புதிய படம் "மண்டாடி". இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "மண்டாடி மண்டாடி" பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தப் பாடல் வரிகள் மற்றும் நடிகர் சூரியின் நடனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. இந்த வரிசையில், மண்டாடி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் வெளியிடப்பட்டது.
அதன்படி, மண்டாடி திரைப்படத்தின் 2-ஆவது பாடல் "உசுரே நீதான் புள்ள" படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இது மனதை வருடும் காதல் மெலடி பாடல் ஆகும்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாக கொண்டு உருவாகி வரும் மண்டாடி திரைப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தலைப்பு தொடங்கி ஒவ்வொரு அப்டேட்டிலும் படம் மீதான எதிர்பார்ப்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


