ஈக்வடார் நாட்டின் கொலம்பிய எல்லைக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், நோர்வே நாட்டின் நட்சத்திரக் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலாண்டின் (Erling Haaland) உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 469 கிலோகிராம் எடையுள்ள கொகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லாரியில் இரகசிய அறையை அமைத்து ரகசியமாகக் கடத்தப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச் சந்தை மதிப்பு சுமார் $11 மில்லியன் டாலர்களுக்கும் மேல் (சுமார் ₹90 கோடி) இருக்கும் எனக் காவல் துறை தெரிவித்துள்ளது.
பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் பரிசோதித்த போது, அதன் அடியில் அமைக்கப்பட்டிருந்த ரகசியக் கட்டமைப்பிற்குள் 370 பச்சை நிறச் செவ்வக பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பாக்கெட்டுகள் ஒவ்வொன்றிலும் மான்செஸ்டர் சிட்டி மற்றும் நோர்வே அணிக்காக விளையாடி உலகளவில் புகழ்பெற்ற எர்லிங் ஹாலாண்டின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களது குறிப்பிட்ட ரகசிய நெட்வொர்க்குகள் மற்றும் வாடிக்கையாளர்களை அடையாளம் காட்டுவதற்காக இதுபோன்று சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள் அல்லது பிரபலங்களின் உருவப் படங்களை ஸ்டிக்கர்களாகப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
அதேவேளை இதற்கு முன்னதாகவும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் படம் ஒட்டப்பட்ட கொகைன் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருட்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் முக்கிய இடைநிலைப் பாதையாகப் (Logistical Hub) ஈக்வடார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ஈக்வடார் காவல் துறை சுமார் 80 டன் அளவிலான போதைப்பொருட்களைக் பறிமுதல் செய்துள்ளது. கால்பந்து உலகைக் தன் திறமையால் வசீகரித்த நட்சத்திர வீரரின் படம் போதைப்பொருள் பாக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.


