TamilsGuide

கனேடியர் ஒருவருக்கு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம் செய்யும்போது, மருத்துவர்கள் அந்த கல்லீரலை ஐஸில் வைத்து பாதுகாத்து, தகுதியான நோயாளி உடலில் அதை பொருத்துவார்கள்.

ஆனால், வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள் மொன்றியல் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள்.

கியூபெக்கைச் சேர்ந்த ஜெரார்ட் (Gérard Landry, 65), 15 ஆண்டுகளாக கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோயால் அவதியுற்றுவந்துள்ளார். 

இந்நிலையில், மொன்றியலிலுள்ள Centre hospitalier de l’Université de Montréal என்னும் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஜெரார்டுக்கு ex-vivo organ perfusion என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரியவகை அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள்.

இந்த நவீன தொழில்நுட்பத்தின்மூலம், தானம் செய்யப்பட்ட ஒரு கல்லீரலை கருவி ஒன்றுடன் இணைப்பார்கள்.

ஐஸில் வைக்கப்படுவதற்கு பதிலாக, உடல் வெப்பநிலையை ஒத்த ஒரு வெப்பநிலையில் வைக்கப்படும் அந்த கல்லீரல், உடலுக்குள் எப்படி இயங்குமோ, அதேபோல, உடலுக்கு வெளியே, அதற்கு உள்ளே, ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்பட்ட இரத்தம் அல்லது செயற்கை உடல் திரவங்கள் செலுத்தப்பட்டு, இயங்கும் நிலையிலேயே வைக்கப்படும்.

உடலுக்கு வெளியே அந்த கல்லீரல் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணித்து, பிரச்சினை இருந்தால் அதை சரி செய்து, தக்க நேரத்தில் அதை நோயாளியின் உடலில் பொருத்துவார்கள்.

பொதுவாக, ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்ட கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டால், அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரலாம்.

ஆனால், இந்த அரிய முறையால், அப்படி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படாமல் போவதுடன், குறைந்த நாட்களிலேயே நோயாளி குணமாகி வீட்டுக்குச் செல்லவும் முடியும்.

வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக ஜெரார்டுக்குதான் இந்த நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதுடன், அறுவை சிகிச்சைக்குப்பின், அவரது உடல் நிலையிலும் எதிர்பார்த்ததைவிட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment