TamilsGuide

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை - அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்

இன்று (14) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என்றும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது.

இன்று நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்துவிட்டதாகக் கூறப்படும் பொய்யான தகவல்களைக் கண்டு பதற்றமடைய வேண்டாம் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விண்ணப்பதாரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, தேவையற்ற அச்சம் அல்லது கவலையின்றி வழக்கம்போல் பரீட்சையை எழுதுமாறும் அவர் அனைத்து பரீட்சார்த்திகளையும் கேட்டுக் கொண்டார்.

இன்று நடைபெறவுள்ள பெளதீகவியல் பாடப் பரீட்சைக்கான முதல் வினாத்தாள்கள் அடங்கிய ஆறு பொட்டலங்கள், அம்பலாந்தோட்டைப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மையத்தில் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெளதீகவியல் வினாத்தாள் அடங்கிய பொட்டலங்கள் எவ்விதத்திலும் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியது.

Leave a comment

Comment