ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும் IRGC கடற்படை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் சுதந்திரமாக இயங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
அண்மைய தகவல்களின்படி, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பாதையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிவுக்கு வருதல், பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
ஈரான் மற்றும் ஓமான் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்த உடன்பாடு மட்டும் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதல்ல என ஈரான் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும்.
இதன் ஊடான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, “நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது” என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், “நீரிணை திறந்துள்ளது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் இடையே தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது.
நடைமுறையில், நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


